சென்னை:சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகள் குறித்து இன்று (மார்ச் 24) உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "2021-2022 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 8,908.29 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேனி 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப்பணிகள்” மற்றும் “புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டப்பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்" என்றார்.
துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதியொதுக்கம் குறித்து பேசிய அவர், "மானியக் கோரிக்கை எண்.12 – “கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை)”, நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,215.58 கோடி ரூபாய். மானியக் கோரிக்கை எண் 42 -”ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை”, பதினைந்தாவது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி, கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியத்திற்காகவும், செயல்திறன் மானியத்திற்காகவும் 1,140.31 கோடி ரூபாய்.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 948.58 கோடி ரூபாய். மானியக் கோரிக்கை எண் 48 – “போக்குவரத்துத் துறை” மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்காக 546.83 கோடி ரூபாய். மானியக் கோரிக்கை எண் 51 - ”இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு”, கோவிட் பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் 333.55 கோடி ரூபாய்.
மானியக் கோரிக்கை எண் 34 – “நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை”, நகர்ப்புர உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு 212.92 கோடி ரூபாய்" என்றார்.
இதையும் படிங்க:நான்கு வழிச்சாலை பணிகள் 70 விழுக்காடு முடிவு: அமைச்சர் எ.வ.வேலு