ஈராயிரம் ஆண்டுகள் அன்னைத் தமிழகம் தவமிருந்து பெற்றெடுத்த தலைமகன்! பூமிப்பந்தில் தமிழர்கள் எங்கெங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்தம் இதயமெல்லாம் தங்க சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன்! சிந்தை, அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்க செய்யும் வகையில் நம்மையெல்லாம் 'தம்பி' என்று அழைத்திட்ட ‘அண்ணன்’! - என மறைந்த கலைஞர் கருணாநிதி அண்ணா குறித்து மேடை ஒன்றில் பேசிய வார்த்தைகள் இவை...
கட்சியால் பயனடைய வேண்டும் என நினைப்பவர்களைவிட தன்னால் கட்சிக்கு என்ன பயன் என்று உழைப்பவர்கள்தான் ஒரு அரசியல் கட்சிக்கு தேவை என்று பகிரங்கமாக அறிவித்தவர், அண்ணா என்னும் சூத்திரதாரி. அந்த இடத்தில் இருந்துதான் அரசியலை அவர் அணுகியிருந்தார்.
அதனால்தான் கட்சி ஆரம்பித்த வெறும் 18 ஆண்டுகளில் திமுகவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆம், 67இல் திமுக ஆட்சி அமைத்தபோது அந்த கட்சிக்கு வயது வெறும் 18. சுதந்திரம் அடைந்து ‘இந்தியா’ என்ற நாட்டை உருவாக்கும் பணிகள் முழுமையடைந்திருந்தன.
இன்றைய அமித் ஷாக்களின் பாட்டனார்கள், தமிழ்நாட்டில் எப்படியேனும் இந்தியை திணித்துவிட வேண்டும் என்று முட்டிமோதிக்கொண்டிருந்தனர். இன்றும் அப்படித்தான் முட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை.
இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்கள் கொதித்துக்கொண்டிருந்த நேரம் அது. தமிழ் இளைஞர்கள் பலர் தீக்கிரையாகியிருந்தது பெரும் கனலாய் கனன்று கொண்டிருந்தது. மக்கள் மத்தியில் இருந்த கொதிப்புணர்வை உணர்ந்திடாதவராய், நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற மிதப்பில் தேர்தலை எதிர்கொண்டார் காமராஜர். தந்தை பெரியாரோ அப்போதைய அரசியல் சூழல்களால் காங்கிரஸுக்கு ஆதரவாக களமிறங்கியிருந்தார்.
இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் என்ற நோக்கில் ராஜாஜியின் சுதந்திரா, கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக், சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி என பலரையும் ஒருங்கிணைத்து மாபெரும் கூட்டணியை உருவாக்கியிருந்தார் அண்ணா. அவர் தலைமையிலான கூட்டணி, எதிர்த்து நின்ற அனைவரையும் தவிடுபொடியாக்கியது. வெறும் 18 வயதே நிரம்பியிருந்த ஒரு கட்சியின் தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளில் 179 தொகுதிகளைக் கைப்பற்றி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.
இதில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் மட்டும் 137. தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ‘அண்ணா நீங்கள்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர். இதனை நீங்கள்தான் அறிவிக்க வேண்டும்’ என கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜாராம் கூறியபோது, ’அதை எப்படி நானே சொல்வேன் என்று முதலில் மறுத்த அண்ணா, பின்னர் கட்சியினரின் வற்புறுத்தலால், ‘நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன். நான்தான் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர்’ என்று அவர் உதிர்த்த வார்த்தைகள் வரலாற்றின் ஏடுகளில் பதிவாகியுள்ள பொக்கிஷங்கள்.
தேர்தலில் வென்ற கையோடு, தன்னை கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த தனது சித்தாந்த தலைவரான பெரியாரை சந்தித்து அண்ணா ஆசி பெற்றார். தம்பி அண்ணாதுரையின் இந்த செயலால் நான் மணப்பெண்ணைப் போல் வெட்கப்பட்டேன் என்றார் பெரியார்.
அதன்பின், வெறும் இரண்டு ஆண்டுகளே உயிர்வாழ்ந்த அண்ணா, மெட்ராஸ் பிரசிடன்சிக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். எந்த சட்டப்பேரவையில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கு எதிராக கூக்குரலிட்டார்களோ, அதே சட்டப்பேரவையில் தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!! தமிழ்நாடு வாழ்க!!! என மூன்று முறை காங்கிரஸ் உறுப்பினர்களையும் சேர்த்து முழக்கமிட வைத்த சுயமரியாதைக்காரன் அவர்.
அதேபோல், ஆட்சி அதிகாரத்தில் இருந்த சொற்ப நாட்களுக்குள் சுயமரியாதை திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான பணியை முன்னெடுத்த அவர், உலக தமிழர் மாநாட்டையும் நடத்திக்காட்டி சாதித்தார். இந்திய உபகண்டத்தில் தமிழினத்தை தலைநிமிரச் செய்த முதல் தலைவர் என்றால் அவர் பேரறிஞர் அண்ணாதான். ‘யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!’ என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலுக்கு எடுத்துக்காட்டாய் தனது வாழ்வை அமைத்துக்கொண்டவர்.