சென்னை: சென்னையில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கும் ஒப்பந்தமானது அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ. 946 கோடியே 92 லட்சம் மதிப்பில் (அனைத்து வரிகள் உட்பட), கடந்த ஆண்டு 2022, நவம்பர் 17ஆம் தேதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம், கூடுதலாக 3 பெட்டிகளைக் கொண்ட 10 மெட்ரோ ரயில்கள் (மொத்தம் 30 பெட்டிகள்) என மொத்தம் 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்கும். இந்த ஒப்பந்தத்தில், வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்களுக்குப் பயிற்சி, உதிரிப் பாகங்கள் வழங்கல் உள்ளிட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குதல் போன்றவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். வழித்தடம் 4ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது எனச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், மேலும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை பயன்பாட்டில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம் - சிறுசேரி வரை (45.4 கிமீ) 3வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை (26.1 கிமீ ) 4வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (44.6 கிமீ) 5வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த 3 வழித்தடங்களில் தற்போது பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், 43.1 கிமீக்குச் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதேபோல, 76 கி.மீ. உயர்மட்டப் பாதையில், 80 ரயில் நிலையங்களும், மேலும் இந்த வழித்தடங்களில் 2 மெட்ரோ பணிமனையும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் எல்லாம் 2026க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சென்னை நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில், சுரங்கம் தோண்டும் பணிகளும், சென்னையிலிருந்து புறநகருக்குச் செல்லும் வழியில் உயர்மட்டப் பாதையானது அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது வரை 5.2 கி.மீ. தொலைவுக்குச் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க:“1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!