சென்னை: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ) கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய திட்டமிடப்பட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளன.
இது குறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2022 - 2023 நிதிநிலை அறிக்கையில் காஞ்சிபுரம் நகரத்திற்கான விரிவான மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய நகர மேம்பாட்டுத் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், சென்னையில் உள்ள வசதிகளை போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் உட்பட 65 கிராமங்களை இணைத்து 2 செயற்கைகோள் நகரங்களை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் திட்டமிடப்பட்டது.
இதற்காக நகராட்சி துறை சார்பில் திருமழிசை, மீஞ்சூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் சுற்றியுள்ள பகுதிகளுக்கான சென்னை பெருநகரப் பகுதிக்கான நகர மேம்பாட்டுத் திட்டம் வரைவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இதில், "ஆயிரம் கோவில்களின் நகரம்" என்றும் அழைக்கப்படும் காஞ்சிபுரம் பாரம்பரியம் மற்றும் பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது.
சென்னையை போல காஞ்சிபுரம் நகரமும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் விளைவாக வணிக நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது சம்பந்தமாக, முக்கிய பகுதியின் பாரம்பரியம் மற்றும் மறுமேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விரிவான மேம்பாட்டுத் திட்டமும், NH-48 ஐ ஒட்டிய கிராமங்களை மையமாகக் கொண்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் நகராட்சி பகுதி தயாரிப்புக்காக அடையாளம் காணப்பட்டு விரிவான வளர்ச்சித் திட்டத்திற்காக NH-48 ஒட்டியுள்ள 17 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி, 36.14 சதுர கிலோ மீட்டர் அளவில் வையாவூர், கலையானூர், புத்தேரி, மெலம்பி, கிளம்பி, சித்தேரிமேடு, கோனேரிக்குப்பம், திம்மசமுத்திரம், அச்சுக்கட்டு, நெட்டேரி உள்ளிட்ட 17 கிராமங்களை ஒருங்கிணைத்து வளர்ச்சியை உறுதி செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுளன.