சென்னை:சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 324 சாலைகள் மிகவும் மோசமாக உள்ளதாகவும், அதனை மழைக்காலத்திற்குள் விரைந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.
மேலும், சாலைகள் அமைக்கப்படும் போது அதன் தரத்தை உறுதிச் செய்ய வேண்டும் எனவும், சாலை உயரம் ஏறுவதை தடுக்கும் வகையில் மில்லிங் முழுவதும் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் தணிக்கை மூலம் கண்டறியப்பட்ட மோசமான சாலைகள் குறித்த அறப்போர் இயக்க ஆய்வறிக்கையை அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள மோசமான சாலைகளை அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறிந்து அதன் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு கடந்த இரண்டு வாரங்களாக அனுப்பி வருகின்றனர். ஒட்டு மொத்தமாக 324 மோசமான சாலைகளை அறிக்கையாக தொகுத்து அறப்போர் இயக்கம் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர், உள்ளாட்சி ஆணையர்கள் மற்றும் ஆட்சியர்கள் என அனைவருக்கும் புகாராகவும் இந்த அறிக்கையை அனுப்பியுள்ளோம். சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு ஒரு அறிக்கையாகவும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு மற்றொரு அறிக்கையாகவும் தயாரித்து அனுப்பியுள்ளோம். இந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீர் செய்ய அறப்போர் இயக்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கிறது.
அறப்போர் இயக்கம் மக்கள் மோசமான சாலைகளை படம் எடுத்து பதிவிட ஒரு Google Form இணையதள லிங்கை கொடுத்து இருந்தோம். 212 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள மோசமான சாலைகளை கண்டறிந்து புகைப்படம் எடுத்து இந்த லிங்கில் 324 மோசமான சாலைகளை பதிவு செய்து இருந்தனர்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 192 மோசமான சாலைகளும், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை புறநகர் பகுதிகளில் 132 மோசமான சாலைகளும் பதிவாகி உள்ளன. சென்னையில் அதிக மோசமான சாலைகளில் ராயபுரம் பகுதியில் 21 சாலைகள், அம்பத்தூர் பகுதியில் 20 மோசமான சாலைகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 22 மோசமான சாலைகள், வளசரவாக்கம் பகுதியில் 39 மோசமான சாலைகள், பெருங்குடி மண்டலத்தில் 21 மோசமான சாலைகள், சோழிங்கநல்லூர் பகுதியில் 26 மோசமான சாலைகள் உள்ளது.
மணலியில் கடந்த ஆண்டு புதிதாக போடப்பட்ட டிபிபி பர்மாசாலை ஒரே ஆண்டில் நொறுங்கிப் போனது அதிர்ச்சி அளிக்கிறது. மண்டலம் 5-இல் மிகப்பெரிய குண்டும் குழியுமாக மின்ட் சாலை போன்ற அதிக போக்குவரத்து உள்ள சாலையின் நிலை உள்ளது. வேளச்சேரி மேடவாக்கம் சாலையை பள்ளிக்கரணை உட்புற சாலைகளுடன் இணைக்கும் காமக்கோடி பிரதான சாலை மிகப் பெரிய குண்டும் குழியுமாக உள்ளதால் அந்தப் பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
மேலும், மடிப்பாக்கம் பகுதிகளில் மழை நீர் வடிகால் வேலையும் சரியாக முடிக்கப்படவில்லை மற்றும் சாலைகளின் தரமும் மிக மோசமாக உள்ளதை கண்கூடாக காண முடிகிறது. சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 132 மோசமான சாலைகள் பதிவாகி உள்ளன.
இதில் சென்னை அருகில் உள்ள கிராம பஞ்சாயத்துகள் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகள் மற்றும் சில நகராட்சி பகுதிகள் அடங்கும். அதில் மிக முக்கியமாக சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட கிராம பஞ்சாயத்துகளான மேடவாக்கம், பெரும்பாக்கம், அகரம் தென், சித்தாலப்பாக்கம், கோவிலம்பாக்கம் போன்ற கிராம பஞ்சாயத்துகளில் மட்டும் 83 மோசமான சாலைகள் கண்டறியப்பட்டு இந்த ஆய்வு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
மேடவாக்கம் போன்ற பகுதியில் ஒருபுறம் வடக்கப்பட்டு சாலை ரவி மெயின் ரோடு, சிபிஐ காலனி ஏரிக்கரை தெரு போன்ற பல சாலைகள் மிக மோசமான நிலைகளில் இருப்பதை பார்க்க முடிகிறது. மற்றொருபுறம் மேடவாக்கம் ரங்கநாதபுரம் ஏரியிலிருந்து நிரம்பி வழியும் நீர் மற்றும் சாக்கடை தெருவில் ஓடி பெரும்பாக்கம் ஏரியை சென்றடைகிறது.
ரங்கநாதபுரம் ஏரி மதகு பகுதியில் இருந்து பெரும்பாக்கம் ஏரி வரப்பு கால்வாய் வரை இணைக்கும் எந்த ஒரு கால்வாயும் இல்லாமல் சாலையிலேயே ஏரியின் நீர் மற்றும் அதன் சாக்கடை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவே வழிந்து ஓடுவதை பார்க்க முடிகிறது. பெரிய அளவில் மழை பெய்தால் இந்த பகுதி எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதை யூகிக்க முடிகிறது.