தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில், ''பொது மக்களுக்கு அவசர காலங்களில் உயிர் காப்பதில் சிறப்பாக சேவை செய்து வரும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசர கால ஊர்திகள் 125 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.
கிராமப்புற வளரிளம் பெண்களுக்கிடையே தன் சுத்தத்தை ஊக்குவிக்க மாதவிடாய் கால சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் 37.47 கோடி ரூபாய் செலவில் நகர்ப்புறத்தில் பயிலும் பள்ளி மாணவியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் பெண்களுக்கும் சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும்.