சென்னை: காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு காவல்துறை உத்தரவிட்டும், அதை உயர் நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டு தான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், ஆனாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
உயர் அதிகாரிகள் அவர்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்கவும் நேரிடும் என தெரிவித்ததுடன், உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் 19 ஆர்டர்லிக்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, 19 ஆர்டர்லிகள் தான் திரும்பப் பெறப்பட்டுள்ளனரா? என கேள்வி எழுப்பி, நாம் ராஜா - ராணி இல்லை என்றும், நாட்டின் அனைத்து குடிமக்களும் ராஜா, ராணிக்கள் தான் என குறிப்பிட்டதுடன், நாம் அனைவரும் மக்கள் சேவகர்கள் தான் என தெரிவித்தார். முதன்மை செயலாளர் முறையாக செயல்பட வேண்டும் என்றும், வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது என்றும், நடவடிக்கை அவசியம் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் காவல்துறைக்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என்றும், 75 வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்றும் வேதனை தெரிவித்தார். சட்ட விரோதமாக தங்கியிருந்த எம்.பி.க்களையே காலி செய்ய உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வேளையில், இங்கு சீருடை அணிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக காவலர் குடியிருப்பில் தங்கி இருப்பதை தடுக்க முடியவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.