தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிறுவர்களை சமூகப்பொறுப்புள்ளவர்களாக மாற்ற சிற்பி திட்டம் பயன்படும்' - முதலமைச்சர் ஸ்டாலின் - சிற்பி திட்டம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்

சிறுவர்களை இளமைக்காலம் முதலே பொது ஒழுக்கம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் மாற்ற “சிற்பி” திட்டம் பயன்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 14, 2022, 6:33 PM IST

சென்னை: கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப். 14) நடைபெற்ற சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் “சிற்பி” திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “காவல் துறையை - மக்களின் நண்பன் என்று சொல்கிறோம். அதற்கேற்ப, மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல, எல்லோருடைய எண்ணமும் அப்படித்தான் இருக்கும்.

காவல் துறையும் - மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமலும் தடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் மக்களையும் காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களைப்போல இது ஒரு முக்கியமான திட்டமாக சிற்பி என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது.

இதனுடைய பொருள் Students in Responsible Police Initiatives (SIRPI) ஆக, சிற்பி என்ற இந்தத் திட்டத்திற்கு பெயரைச் சூட்டி அதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி, மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல் துறையைச் சார்ந்த அலுவலர்களுக்கு என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வளர்ச்சி என்பது ஒரு பக்கத்திலே இருந்தாலும் இன்று ஒரு பக்கத்திலே சில சமூகப் பிரச்னைகள் அதிகமாகி வருவதை நாம் கவனித்தாக வேண்டும்; அதைத் தடுத்தாக வேண்டும்.

போதைப் பொருள் ஒழிப்பு

* குடிப்பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
* சட்டம் சார்ந்த விழிப்புணர்வு பெறச்செய்தல்
* அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பினை ஏற்படுத்துதல்
* சுய ஆளுமைத்திறனை மேம்படுத்துதல்,
* பெற்றோர்களது பேச்சை மதித்து நடத்தல்
* பொதுமக்களோடு தொடர்பு
* இளம் வயதிலிருந்து போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க செய்தல்,
* மாநிலத்தின் செழுமை மற்றும் வளர்ச்சியைக் கண்டு பெருமை கொள்ளச்செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடையே உருவாக்கியாக வேண்டும்.
* இப்படி உருவாக்கப்படும் மாணவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக தலைசிறந்து விளங்குவார்கள். அதாவது சிற்பியைப் போல நாம் மாணவர்களைச் சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின் உரை

இந்தச்செயல் திட்டத்திற்குத்தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப்பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவியர்கள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அலுவலர்களின் முன்னிலையில் கூடுவார்கள். மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகளைக் காவல்துறை அலுவலர்களும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகம் ஒன்று வழங்கப்படும்.

இந்தப் பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இருக்கக்கூடாது. அவர்களது தன்மானத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் யாரும் நடக்கக் கூடாது. எந்தவிதமான புகாரும் வராமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நல்லொழுக்கம் கொண்டவர்களாக அவர்களை வளர்ப்பதன் மூலமாக நல்ல தலைமுறைகளை உருவாக்குவோம்” என்றார்.

இதையும் படிங்க:தனியார் கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக்குழுவின் சம்பளம் வழங்கப்படுவதில்லை - துணைவேந்தர் கெளரி

ABOUT THE AUTHOR

...view details