சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாநில அரசின் சார்பில் சென்னை, எழும்பூர், அருங்காட்சியக வளாகம், தேசிய கலைக்கூடம் எதிரில் காந்தியடிகளின் திருவுருவச்சிலையினை நாளை (ஆகஸ்ட் 15) காலை 10.30 மணியளவில் திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”காந்தியடிகள் தமிழ்நாட்டில் மேலாடை துறந்து எளியவர்களைப் போல அரை ஆடை உடுத்திய நூற்றாண்டு நினைவாகவும், 75ஆவது சுதந்திரத் திருநாள் – அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கின்ற வகையிலும் உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலையானது முதலமைச்சரால் திறக்கப்படவுள்ளது.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களும், கலவரங்களும் நிகழ்வதைக் கண்டு வேதனை அடைந்த காந்தியடிகள், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அயராது முயற்சியில் தன்னையே அர்ப்பணித்து வந்தார்.
காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்புச் சத்தியாகிரகம், சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு ஆகிய முக்கியமான போராட்டங்கள், இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது. சுதேசி இயக்கம், தீண்டாமை, மது விலக்கு இவற்றையே தனது லட்சியமாக கொண்டிருந்தார், அண்ணல் காந்தியடிகள்.
தமிழ் மீது பற்று கொண்ட காந்தியடிகள்:மேலும், சத்தியம், அகிம்சை இவை இரண்டையும் தன் இரு கண்கள் போல போற்றி, தம் வாழ்நாள் இறுதி வரை கடைபிடித்து வந்தார். குஜராத்தில் பிறந்து, இந்திய மொழிகள் பல கற்றறிந்தாலும், தமிழ் மொழி மீதும் தமிழ் மக்கள் மீதும் அண்ணல் காந்தியடிகள் அளவற்ற அன்பும், நேசமும் கொண்டிருந்தார்.