சென்னை:மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மதுரையில் உள்ள அவரது வீட்டில் முதுமை காரணமாக நேற்றிரவு (ஜூலை 25) இயற்கை எய்தினார். மூத்தத் தமிழறிஞரும் தமிழ் ஆசிரியருமான இளங்குமரனார், தமிழ் மொழிக்கு ஆற்றிய பெரும் தொண்டின் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ் இலக்கியம் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி சாதனை படைத்தவர்.
செந்தமிழ் சொற்பொருள்களஞ்சியம் 14 தொகுதிகளும், தேவநேயப்பாவணர் குறித்த ஆய்வு நூல்களான 'தேவநேயம்' 10 தொகுதிகளும் இவரது தமிழ் தொண்டிற்கு முக்கிய சான்றுகளாய் திகழ்கின்றன.
இவரின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், " தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான அய்யா இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும், இலக்கிய வளமும் கொண்ட தமிழ்மொழியை அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது 94ஆவது அகவையில் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார்.
திருக்குறள் ஓதி திருமணம்
தமிழ்மறையாம் குறள்நெறி வழியில் தமிழர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தியதுடன் வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். 2000ஆண்டின் தொடக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குமரி முனையில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மகத்தான நிகழ்வில் அய்யா இளங்குமரனார் பங்கேற்று உரையாற்றியது தனிச்சிறப்பாகும்.