சென்னை:இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள நீண்டகால பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும்,
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரியும், முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று(பிப்.1) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து நேற்று (ஜன.31) 12 மீனவர்கள் IND-TN-06-MM-7747 என்ற பதிவு எண் கொண்ட மீன்பிடி விசைப்படகில் நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபொழுது இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படைத்தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த IND-PY-PK-MM-1139 என்ற பதிவு எண் கொண்ட மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
நீண்டகாலப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணுங்கள்
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில், 68 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசு மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு சமீபத்தில் விடுவிக்கப்பட்டு, தாயகம் திரும்பக் காத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில், தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மீனவ மக்களிடையே பீதியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைச் சிறைகளில் உள்ள நமது மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது, மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்குவதோடு, அக்குடும்பங்களும் வறுமையில் தள்ளப்படுகின்றன.
இந்த விவகாரத்தில் நீங்கள் உடனடியாகத் தலையிட்டு இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே உள்ள இந்த நீண்டகாலப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க, உறுதியான வழிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் இரண்டு விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Budget 2022: மத்திய பட்ஜெட்டில் உள்ள 10 முக்கிய அம்சங்கள்