தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஹஜ் புனித யாத்திரை... சென்னை விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குக' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை தொடர வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

By

Published : Nov 11, 2021, 6:51 PM IST

சென்னை:2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து செல்ல ஏதுவாக, உரிய நடவடிக்கையினை எடுக்கக்கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவ.11) கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில் ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள ஹஜ் 1443 (H) 2022 அறிக்கையில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் இடம்பெறவில்லை.

இது குறித்து கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், " 2019ஆம் ஆண்டில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்துள்ள நிலையில், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களிலிருந்தும் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கொச்சி விமான நிலையம் தூரம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த யாத்ரீகர்கள் விமானம் ஏறும் இடமாக, தற்போது கேரளாவில் உள்ள கொச்சி விமானநிலையம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாத்ரீகர்களுக்கு மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.

இதுகுறித்து ஏராளமான கோரிக்கைகள் இஸ்லாமிய சமூகத்தினர், பொதுமக்கள், பல்வேறு அரசியல் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பெறப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை பெரும்பாலான யாத்ரீகர்களுக்கு சவாலாக உள்ள நிலையில், சென்னையிலிருந்து சுமார் 700 கி.மீ., தொலைவில் உள்ள கொச்சி நகரை புறப்படும் இடமாக அறிவிக்கப்பட்டதை மாற்றி, யாத்ரீகர்களுக்கு பயனளிக்கும் வகையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தியாவின் நான்காவது பெரிய பெருநகரமாக விளங்கிடும் சென்னை விமான நிலையத்திலிருந்து தொடர்ந்து வழக்கம்போல் புறப்படும் வகையில் அனுமதி வழங்கிட தொடர்புடைய துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details