சென்னை:15ஆவது குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை (ஜூலை 18) நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களம் இறக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி சென்னை வந்த யஷ்வந்த் சின்கா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீன் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரினார்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் முறை குறித்து விவரிக்க திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஜூலை 17) சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
மேடையில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, அரசு கொறடா கோ.வி.செழியன், திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இருந்தனர். கூட்டத்துக்கு வந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சமூக இடைவெளி விட்டு அமரவைக்கப்பட்டனர். கூட்டம் சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற நிலையில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்கவில்லை.