சென்னை:தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். இவ்வாறு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் வைக்காமல் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வகையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில், இதே போல் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு எதிராக அம்மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து, “மாநில சட்டசபையில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். ஆனால், மசோதாவை கிடப்பிலேயே வைத்திருக்க முடியாது” எனத் தெளிவுபடுத்தியது.
மேலும், “சட்டசபையில் இரண்டாவது முறையாக ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பும்போது, அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மறுப்பதற்கு வாய்ப்பே கிடையாது. மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது மாநில அரசின் அதிகாரத்தை முடக்குவது போன்றதாகும்.
சட்டப்பிரிவு 200, ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் உரிமையைத் தருகிறது என்றாலும், அதை மாநில சட்டசபைக்குத் திரும்ப அனுப்பி இருக்க வேண்டும். சட்டசபையில் சட்டங்களில் திருத்தம் செய்வதையோ அல்லது நிறைவேற்றுவதையோ ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வைத்திருக்க முடியாது” என உறுதிபடுத்தினர்.
இந்நிலையில் இந்த தீர்ப்பை மேற்கோள் காட்டி, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில், “ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமின்றி, அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தீர்ப்பின் ஒவ்வொரு வரியையும் படித்துவிட்டு, தேவைப்பட்டால் திறமையான மூத்த வழக்கறிஞரை அழைத்து, தீர்ப்பை அவருக்கு விளக்குமாறு கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
பா.சிதம்பரத்தின் X பதிவை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரீட்விட் செய்து, “மாநில சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் முறியடிக்க முடியாது" - உச்சநீதிமன்றம். அடுத்த Speaking4India எபிசோடில் விரிவாகப் பேசுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: “பக்தி இல்லை, பகல் வேஷம் போடுகின்றனர்” - நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!