தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும்விதமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
இது தவிர நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலமும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில் இன்று (நவ. 14) தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 8ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.
அதாவது தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பூங்காக்கள், ரயில் நிலையங்கள், பள்ளிகள் என சுமார் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட லாக்மா நகரில், தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த மு.க. ஸ்டாலின், முகாமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.