தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசாணை அறிவிப்புகள் கடைக்கோடி மக்களுக்கு சென்றுள்ளதா? - அலுவலர்களிடம் முதலமைச்சர் கேள்வி - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வெளியிட்ட அரசாணை அறிவிப்புகளானது, கடைக்கோடி மக்களுக்குப் போய் சென்றுள்ளதா என அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும்‌ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

By

Published : Jun 2, 2022, 10:45 PM IST

சென்னைதலைமைச்செயலகத்தில் துறைச்செயலாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், பல்வேறு அறிவிப்புகளைக் கடந்த ஆண்டு அறிவித்திருக்கிறோம்.

அப்படி அறிவித்த அறிவிப்புகளில் சிறப்பான வகையில் சில திட்டங்கள் செயலாக்கத்திற்கு வந்திருக்கின்றன. இருந்தாலும், சில துறைகளில் இன்னும் அரசாணைகள் வெளியிடுவதில் தாமதம் காணப்படுகிறது. அதற்கான காரணங்களை நீங்கள் இங்கே தெரிவித்திருக்கிறீர்கள். அதையும் களைந்து விரைவான, தேவையான அனைத்து ஆணைகளையும் நீங்கள் வெளியிட வேண்டும். இதில் நீங்கள் நேரடியாக கவனத்தை செலுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளின் மூலம் உரிய திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்குப் போய் சென்றடைந்திருக்கிறதா? அவற்றிற்குச் செயலாக்க வடிவமும் தர வேண்டும்’’ என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் ‘துறைத் தலைவர்களை வழி நடத்தி, மாவட்ட ஆட்சியர்களை ஈடுபடுத்தி இதனை நீங்கள் உடனடியாக செய்யவேண்டும். அதைத்தான் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்’ என குறிப்பிட்டார்.

“தொழில் துறையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நாம் முன்னெடுத்திருக்கிறோம். அது விரைவில் நடைமுறைக்குக்கொண்டு வந்து, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்புகளை நாம் பெருக்க வேண்டும். எனது கனவுத் திட்டமான ‘நான் முதல்வன்’ அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும்” என ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

“மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் கரோனா தொற்றுப்பரவல் தடுப்புப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது துறையின் அடிப்படையான மருத்துவ சேவைகளை மேம்படுத்தி வழங்கி, ஐ.எம்.ஆர்., மற்றும் எம்.எம்.ஆர். போன்ற குறியீடுகளை அனைத்து மாவட்டங்களிலும் கண்காணித்து, மருத்துவமனை நிர்வாகத்தினை மக்கள் மேலும் விரும்பும் வகையில், மக்களின் நண்பனாக (People friendly) இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், ’’கிராமப்புற மக்களை மையமாகக் கொண்டு செயல்படும் ஊரக வளர்ச்சித்துறையானது குடிநீர் வசதி, ஊரக வீட்டு வசதித்திட்டம், ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதிலும் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும்.

வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரையில், உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய அந்தத்துறையை பலப்படுத்திடவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்கவும் வேண்டும் என வலியுறுத்திய அவர் இதன்மூலம் மட்டுமே, விவசாயிகளின் வருமானத்தை நாம் அதிகரிக்க முடியும். ஆகவே, இதில் இத்துறை கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

'தமிழ்நாடு மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும். புதிய யுக்திகளை, அவை எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.

ஒவ்வொரு துறைத்தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து, தனது துறையில் செம்மையாகச் செயல்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:திகைக்க வைக்கும் எம்.பி.க்களின் சொத்துவிவரங்கள் - ப. சிதம்பரத்தின் சொத்துமதிப்பினை அறிவீர்களா?

ABOUT THE AUTHOR

...view details