தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'

குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் இந்திய அளவில் உயர் பணிகளில் இருக்கிறபோதும் நீங்கள் பிறந்த மண்ணை, வளர்ந்த மண்ணை, தவழ்ந்தபோது பேசிய தாய்மொழியை மறந்துவிடாதீர்கள் என மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

anna management institute  civil service exam  cm stalin speech  cm stalin speech on civil service exam winner  chennai news  chennai latest news  ஸ்டாலின்  குடிமைப் பணி தேர்வு  குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா  பாராட்டு விழா
ஸ்டாலின்

By

Published : Oct 1, 2021, 2:51 PM IST

Updated : Oct 1, 2021, 3:52 PM IST

சென்னை:அகில இந்திய குடிமைப் பணி தேர்வு 2020இல் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதில் 2020-2021ஆம் ஆண்டுக்கான குடிமைப்பணி தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 26 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளி ரஞ்சித்துக்கு, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 50 ஆயிரம் நிதியுதவியையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

கடுமையான போட்டி நிறைந்த தேர்வு

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசுப் பணி என்பது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விருப்பமாக இருக்கக்கூடிய பணி. அதிலும் குறிப்பாக இந்திய ஆட்சிப் பணி என்பது எண்ணற்ற இளைஞர்களின் கனவாக இருக்கக்கூடிய நிலை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலத்தை சேர்ந்த இளைஞர்களும் சிறு வயது முதலே முயன்று உழைத்து கடுமையாகப் பாடுபட்டு எழுதக்கூடிய பரீட்சை இது.

குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

அதில் பல இளைஞர்களுடைய பெற்றோர் இந்திய ஆட்சிப் பணியிலோ, இந்தியக் காவல் பணியிலோ பணியாற்றக் கூடியவர்களாக இருப்பதும் உண்டு. அவர்கள் நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் படித்து, இந்தத் தேர்வுக்குக்காக கல்லூரி வாழ்க்கையிலேயே கவனத்தைச் செலுத்தி படிப்பவர்களாகவும் இருக்கின்றனர். எனவே கடுமையான போட்டிகள் நிறைந்ததாக இந்தத் தேர்வு எப்போதும் திகழ்ந்துகொண்டு இருக்கிறது.

பாராட்டு விழா

இந்தியாவின் உயர்ந்த பணிகளில் இத்தேர்வின் மூலம் தேர்ச்சி பெறக்கூடியவர்கள் அமர்ந்து நிர்வாகத்தைச் செம்மையாக நடத்தக்கூடிய பெரிய பொறுப்பை வகிப்பதுதான், இந்தத் தேர்வின் மீது பல இளைஞர்கள் ஆர்வம் கொள்வதற்கு அடிப்படையாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அது எப்போதுமே சமூக நீதியை முன்னிறுத்தும் மாநிலமாகத் திகழ்கிறது.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம்

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய அனைவருமே சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவதைத் தங்கள் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு வாழ்ந்தவர்கள். வசதி படைத்தவர்கள் மட்டுமே எழுத முடியும் என்றிருந்த இந்தத் தேர்வைக் கடைக்கோடியில் இருப்பவர்களும் எழுத வேண்டும் என்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், எளிய குடும்பங்களிலிருந்து வருகிற இளைஞர்களுக்குச் சுட்டுவிரலாகவும், கைப்பிடித்து அழைத்துச் செல்கிற ஆதரவுக் கரமாகவும் அமைந்துள்ளது. இங்கு இளைஞர்கள் தங்குவதற்காகவும், உணவருந்துவதற்காகவும், பயிற்சியை எதிர்கொள்வதற்காகவும், அரசு செலவில் வசதிகள் செய்து தரப்பட்டன.

அவர்கள் கடிவாளமிடப்பட்ட குதிரைகளைப்போல போட்டித் தேர்வுகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்த மையத்தை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நடத்தி வருகிறது. இம்மையத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதுடன், உதவித்தொகை வழங்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆளுமைத் தேர்வுக்கு செல்பவர்களுக்கு தங்கும் வசதி

குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

உண்ண உணவு, தங்க உறைவிடம், கற்றுத்தர பேராசிரியப் பெருமக்கள், அனுபவங்களைப் பகிர ஆட்சிப்பணி அலுவலர்கள், குறிப்புக்களைப் புரட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள், பாதுகாப்பான வளாகம் என்று அனைத்து வசதிகளும் கொண்ட இந்த வளாகம் இத்தேர்வில் வெற்றிபெற விரும்பும் இளைஞர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது.

இந்த மையத்தில் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெறுபவர்கள் நூல்களை வாங்கி தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள, மாதம் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபாய் உதவித் தொகையாகவும் வழங்கப்படுகிறது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலை எதிர்கொள்ள மாதிரி ஆளுமைத் தேர்வுகள் நடத்தப்படுவதோடு அவர்களுடைய செயல்பாட்டை வீடியோ மூலம் பதிவு செய்து தங்களுடைய குறைநிறைகளை அறிந்து கொள்ள சீடிகளும் வழங்கப்படுகின்றன.

அவர்கள் டெல்லியில் ஆளுமைத் தேர்வில் கலந்துகொள்வதற்கு ஐயாயிரம் ரூபாய் பயணப்படி வழங்குவதுடன் தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் வசதியும் செய்துதரப்படுகிறது. இன்று இந்த மையம் அனைத்து வசதிகளையும் கொண்ட உயர்தர வழிகாட்டி மையமாகத் திகழ்கிறது.

உலகளவில் மிகக் கடுமையான போட்டித் தேர்வு

குடிமைப் பணி அலுவலர்கள் அரசின் மூன்று தூண்களான சட்டப்பேரவர், நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றில் ஒரு தூணாக இருப்பவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற அரசு நிறைவேற்றும் சட்டங்களையும், தீட்டித் தரக்கூடிய திட்டங்களையும் சிந்தாமல் சிதறாமல் ஏழை எளிய மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிற பெரும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

துரிதமான நடவடிக்கை, விரைவான செயல்பாடு, ஓயாத உழைப்பு, சார்நிலை அலுவலர்களை ஊக்கப்படுத்தும் தன்மை, தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காத தலைமைப் பண்பு, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் போன்றவற்றையெல்லாம் அவர்கள் பெற்றிருக்கிறார்களா என்பதைப் பரிசோதிக்கும் பொருட்டுதான் இத்தகைய கடினமான போட்டித் தேர்வு ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. உலகளவில் மிகக் கடுமையான போட்டித் தேர்வுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்தத் தேர்வில் வெற்றிப்பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கே பெருமை. நீங்கள் எல்லோரும் அரசின் உயர் பதவிகளில் அமர்ந்து பணியாற்றும்போது, தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நன்மைகள் தடம்புரளாமல் சென்றடைய வேண்டும் என்கிற எண்ணத்தோடு பாடுபடுவீர்கள் என நான் நம்புகிறேன்.

தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நன்மைகள்

இந்திய அளவில் உயர் பணிகளில் இருக்கிறபோது நீங்கள் பிறந்த மண்ணை, வளர்ந்த மண்ணை, தவழ்ந்தபோது பேசிய தாய்மொழியை மறக்காமல் செயல்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். குடிமைப் பணியில் தேர்வு பெறுவது என்பது கடவுச்சீட்டு மட்டும்தான். அதுவே பயணச் சீட்டாகி விடாது. இது நுழைவாயிலே தவிர இதையே மாளிகை என்று கருதிவிடக் கூடாது. நீங்கள் இனிமேல்தான் அதிகம் உழைக்க வேண்டிய தருணங்களைச் சந்திக்கப் போகிறீர்கள்.

இரண்டு ஆண்டுகள் நீங்கள் ஆற்ற வேண்டிய பணி குறித்து உங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவிருக்கின்றது. அந்தப் பயிற்சியின்போது இன்னும் நன்றாக உங்களைப் பட்டை தீட்டிக்கொள்ளுங்கள். உங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். நிர்வாகத்தின் ஆழத்தை அனுபவம் வாய்ந்த மற்ற அலுவலர்களிடமிருந்து உறிஞ்சிக்கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சி மேலாண்மையை உயர்த்திக் கொள்ளுங்கள்.

சமூக நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள். சிக்கல்களில் சிதைந்து போகாமல் சமாளிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் பல பணிகளை ஆற்றும் ஆற்றலை கூர்மைப்படுத்திக் கொள்ளுங்கள். பெட்டிக்கு வெளியே சிந்திக்கும் பரிமாணத்தை கற்றுக்கொள்ளுங்கள். மற்றவரிடமிருந்து எவ்வளவு வாழ்க்கை நெறிகளை நாம் பெற முடியும் என்பதிலும் விழிப்புணர்வோடு இருங்கள்.

குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

பிறந்த சிற்றூரை மறக்காதீர்கள்

நாம் பெற்றிருக்கிற வெற்றி நமக்கானதல்ல, சமூகத்திற்கானது என்று சிந்தியுங்கள். எப்படியெல்லாம் பயிற்சியில் பெறுகிற அறிவைக் களத்தில் பயன்படுத்தலாம் என்று நீங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்திப் பாருங்கள். அப்போதுதான் அந்தப் பயிற்சி உங்களை சிறப்பாக மாற்றி அமைக்கும் என்பதை உங்களுக்கு இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிது.

இந்திய ஆட்சிப் பணியில் வந்தவுடன் நாம் எந்தச் சிற்றூரிலிருந்து வந்தோம் என்பதை மறந்துவிடக் கூடாது. நாம் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒருபோதும் சிந்திக்கக் கூடாது. அரசு வசதிகளை எவ்வாறு துய்க்கலாம் என்று மனக்கணக்கு போடக்கூடாது.

நீங்கள் நேர்மையாகவும், தூய்மையாகவும் பணியாற்ற வேண்டிய கடமை உணர்வோடு ஒவ்வொரு நொடியும் திகழ வேண்டும். பணியில் இருக்கும்போது பலர் உங்களைத் தவறான வழிக்குத் தூண்டுபவர்களாக இருப்பார்கள். எந்தவிதமான சபலத்திற்கும் ஆட்பட்டுவிடாமல் நேர்கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து நடைபோட வேண்டியது உங்களுடைய கடமை.

பிரச்சினைகளை கண்டு ஒடி ஒளிய கூடாது

இந்திய ஆட்சிப் பணியிலோ, மற்ற குடிமைப் பணியிலோ நீங்கள் பணியாற்றும்போது மக்களை நேசிப்பது மிகவும் முக்கியம். அவர்களுக்காகத்தான் நாம் பணியாற்றுகிறோம் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளியாமல் அவை கிளம்பும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்துத் தீர்த்து வைப்பதுதான் நல்ல நிர்வாகத்திற்கு அழகு.

உயர்ந்த அலுவலராக, மக்கள் மனத்தில் நிற்கும் ஒப்பற்ற மனிதராக, செல்லுகிற இடங்களில் எல்லாம் நீங்கள் அந்த இடத்தை அடைவதற்கு முன் உங்கள் நற்பெயர் சென்று சேரக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும் என மூத்த சகோதரனாக வலியுறுத்துகிறேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினிக்கு சிலை அமைக்க ஓபிஎஸ் வேண்டுகோள்!

Last Updated : Oct 1, 2021, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details