சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (ஆக. 6) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், சென்னை முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாம் அனைவரும் ஒரே கொள்கை கூட்டத்தை சார்ந்தவர்கள்.
தியாகத்தால் மூத்தவர் நல்லகண்ணு: நாம் தனித்தனி இயக்கத்தை சார்ந்தவராக இருந்தாலும் கொள்கையின் அடிப்படையில் ஒரே இயக்கமாக உள்ளோம். இந்த மாநாடு நடைபெறும் நேரத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு தமிழ்நாடு அரசின் தகைச்சால் தமிழர் விருது என்ற அறிவிப்பு சாலப் பொருந்தும்.
நல்லகண்ணுவை இயக்கத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது, இயக்கமே வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும் போராளி அவர். 97 வயது கடந்தும் அவர் இந்த சமுதாயத்திற்காக தொண்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார். வயதால் மட்டுமல்ல தொண்டாலும் மூத்தவர். தியாகத்தால் மூத்தவர், அரசியல் போராட்டங்களால் மூத்தவர். நாட்டிற்கு தன்னையே ஒப்படைக்கும் மனம் உறுதி பெற்றவர், எளிமையின் சின்னமாக கொள்கையின் அடையாளமாக வாழும் நல்லகண்ணுவிற்கு இவ்விருதை வழங்குவது எனக்கு கிடைத்த பெரும் பெயராக கருதுகிறேன்” என பெருமிதம் கொண்டார்.
சமூக நல்லிணக்கம்:தொடர்ந்து பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில், திருப்பத்தூர் வட்டம், சிராகையில் கிராமத்தில் காந்தி மற்றும் இடதுசாரி தலைவர் ஜீவா ஆகியோர் சந்தித்த இடத்தில் சிறப்பான வகையில் மணி மண்டபம் கட்டப்படும். மாநிலங்களை உருவாக்குவதால், இந்திய ஒருமைப்பாடு வளம் பெருமே தவிர, சிதையாது என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசியவர் ஜீவா. இந்த சிந்தனைகள் இன்றைய இளைஞர்களிடம் பரவினால் சமூக நல்லிணக்கம் ஏற்படும். மாநில உரிமைகள் நீடிக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்திய நாட்டிற்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நல்லிணத்தை கெடுப்பது, மாநிலங்களின் உரிமைகளை சிதைப்பது, இந்த இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. பல்வேறு இனம், மொழி, மதம், பண்பாட்டு வேறுபாடுகள் கொண்ட மக்கள் இந்தியாவில் வாழ்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்கிறோம். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமைகள், அனைத்து மதத்தவர்களுக்கும் சமமான வழிபாட்டு உரிமைகள், பண்பாட்டு வேற்றுமைக்கு எந்த தடையும் இல்லை.
அனைவரும் ஒன்று:மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்து இருந்தாலும், அண்டை மாநிலங்களோடு நட்புறவு, பொருளாதார ஏற்றுமதி, இறக்குமதியில் நட்புறவு, என எத்தனையோ நல்ல நோக்கத்துடன் இந்தியா அமைதியாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. இதனை சிதைப்பதை நோக்கமாக செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சக்திகள்தான் தேச விரோத சக்திகள், இவைதான் நாட்டினுடைய எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உலை வைப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் நம்மை பார்த்து தேச விரோதிகள், நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
அனைவரையும் ஒன்றாக நடத்துங்கள், அனைத்து மொழிகளையும் ஒன்றாக மதியுங்கள், அனைத்து இனங்களுக்கும் உரிமைகள் தாருங்கள், எந்த மதத்தை சார்ந்தவர்களின் வழிபாட்டு உரிமையிலும் தலையிடாதீர்கள், நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்று சமத்துவம் பேசுவது தேச விரோதமா? அல்லது ஒரே மதம் ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேசவிரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்க வேண்டிய கேள்வி இது மட்டும்தான்.
இது இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிகள் கேட்க வேண்டிய கேள்வி மட்டும் அல்ல, இந்தியாவே கேட்க வேண்டிய கேள்வி. இது ஆகஸ்ட் மாதம், விடுதலை மாதம், வேற்றுமைகளை கடந்து இந்தியாவின் மக்களாக நம்மை நாமே உணர்ந்து, நம் முன்னோர்கள் போராடியதால்தான் நமக்கு 1947ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. வேற்றுமைகள் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருவதால் தான் 75 ஆண்டுகள் கடந்தும், விடுதலை இந்தியா கம்பீரமாக காணப்படுகிறது.