தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொழிற்நிறுவனங்கள் கலந்தாய்வுக் கூட்டம்' மு.க.ஸ்டாலின் உரை! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முன்னணி தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாய்வு கூட்டத்தில், கரோனா தடுப்புப் பணிகளில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

revert it CM Speech At Meeting With Industrialists
revert it CM Speech At Meeting With Industrialists

By

Published : May 20, 2021, 8:05 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் உடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று (மே 19) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு:

கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஊரடங்கு, எனினும் ஊரடங்கு என்பது ஒரு தீர்வு அல்ல! ஏனென்றால் அது பலரது வாழ்வையும், வாழ்வாதாரத்தையும், தொழிலையும் பாதித்துவிடும்.

எனவேதான் தொடர் உற்பத்தி நிறுவனங்கள், அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றின் விநியோகிப்பாளர்கள், ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இயங்க அனுமதித்துள்ளோம்.

தொழிற்நிறுவனங்கள் உடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின்.

இத்தகைய நிறுவனங்கள் எவ்வித சிரமமுமின்றி இயங்க ஏதுவாக அவற்றின் தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணிக்குச் சென்றுவர இ-பதிவு முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.

உங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி அழைப்பு சேவையும், தொழில் வழிகாட்டி மையத்தில் (GUIDANCE BUREAU) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கரோனா பெருந்தொற்றானது மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு மீது ஒரு பெரும் அழுத்தத்தை உண்டாக்கியுள்ளது. இருப்பினும், நம் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து முன்களப் பணியாளர்களும், இதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கின்றன. அவற்றைப் பெற்று விநியோகம் செய்வதில் இந்த அரசு தீவிர அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு தற்போது நாளொன்றுக்கு 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே ஆக்ஸிஜன் தயாரிப்பு அளவை உயர்த்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மூன்று ஆக்ஸிஜன் நிலையங்கள் மூலம் 15 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு தொழில் நிறுவனங்கள், சிப்காட் மூலம் சுமார் 7 ஆயிரத்து 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் பெறப்பட்டு வருகின்றன.

சிப்காட் நிறுவனம் இதுவரை 500 சிலிண்டர்களை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாகக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும் 1,650 சிலிண்டர்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்படுகின்றன.

மேலும் CII மற்றும் Samsung போன்ற நிறுவனங்கள் மூலமாக, சுமார் 500 சிலிண்டர்கள் நம் மாநிலத்திற்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர 25 கோடி தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சிக்கலான இக்காலகட்டத்தில் அரசோடு தோள் கொடுத்து நிற்கும் தொழில் நிறுவனங்கள் அனைத்திற்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அரசுக்கு தேவையானவற்றில் உங்கள் பங்களிப்பை வழங்கக் கேட்டுக்கொள்கிறேன்.

குறிப்பாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்ஸிஜன் ப்ளோமீட்டர்கள், கிரையோஜெனிக் டேங்க்ஸ் / ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள் தாராளாமாக நிதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது இந்த நிதிக்கு வழங்கப்படும் அனைத்து நன்கொடைகளும் கரோனா நோய்த்தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டுமென்ற கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவை மேற்கொள்ளும் கொள்முதல்களின் செலவினங்களை நேரடியாக அந்தந்த விற்பனையாளர்களுக்கு நீங்கள் செலுத்தலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பல உயிர்களைக் காக்கவும், கரோனாவிலிருந்து நமது மக்களை மீட்கவும் பேருதவியாக இருக்குமென்பதை சுட்டிக்காட்டி உங்கள் பங்களிப்புக்கு முன்னதாகவே நன்றி கூறி என் உரையை முடிக்கிறேன் என்றார் முதலமைச்சர்.

ABOUT THE AUTHOR

...view details