சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் செய்யப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட அறிவிப்பு அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றும் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஜூலை 8 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், தனது 10-1-2023 நாளிட்ட கடிதத்தினை 12-1-2023 அன்று புதுதில்லியில், தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் அளித்ததை நினைவுகூர்வதாகவும், அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருள் குறித்து, தற்போது குடியரசுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: கொந்தளித்த முதலமைச்சர்:மேலும் அந்தக் கடிதத்தில், 15-6-2023 அன்று, தனது அமைச்சரவை சகாக்களில் ஒருவரான வி.செந்தில்பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளை தனது அமைச்சரவையில் உள்ள வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்பியதாகவும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்பி, இலாகா மாற்றம் தொடர்பான கடிதத்தை 15.6.2023 அன்று ஆளுநருக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து 16.6.2023 அன்று ஆளுநர், இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு ஆளுநர் தனக்குக் கடிதம் எழுதியதாகவும், அதில் செந்தில்பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்கிறார் என்பதால், இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என்ற தனது பரிந்துரையை ஏற்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரிடமிருந்து மேற்கண்ட கடிதம் கிடைத்ததும், செந்தில்பாலாஜி அமைச்சரவையில் நீடிப்பது தொடர்பான எனது பரிந்துரையை வலியுறுத்தி அன்றே பதில் அனுப்பியதாக கூறியுள்ளார். மேலும் அமைச்சர்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாகவும், எனது ஆலோசனைக்கு முரணாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுகிறார் என்பதையே இச்செயல்கள் காட்டுகின்றன என தெரிவித்தார்.
கிரிமினல் நடவடிக்கைகளைக் கொண்டு ஆளுநர் கடிதம்:இது ஒருபுறமிருக்க, முன்னதாக 31-5-2023 அன்று வி. செந்தில்பாலாஜி மீதான "கிரிமினல் நடவடிக்கைகள்" அவருக்கு சாதகமாக முடிவடையும் வரை, அவரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குமாறு ஆளுநர் கடிதம் அனுப்பிய நிலையில், அதற்கு உடனே 1.6.2023 தேதியிட்ட ஒரு கடிதத்தை தான் எழுதியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் சட்டப்படி, ஒரு அமைச்சர் கைது செய்யப்படுகிறார் அல்லது விசாரணை அமைப்பால் விசாரிக்கப்படுகிறார் என்பதற்காக அவர் பதவி வகிக்கத் தகுதியற்றவர் எனக் தெரிவித்தது குறித்து விரிவாக விளக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
லில்லி தாமஸ் வழக்கை மேற்கோள் காட்டிய முதலமைச்சர்:அந்த வகையில், (1) விசாரணையை எதிர்கொள்ளும் நபர், (2) குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நபர் மற்றும் (3) நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தண்டிக்கப்பட்ட நபர் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைத் தான் குறிப்பிட்டதாகவும், லில்லி தாமஸ் எதிர் இந்திய ஒன்றியம் (2013) பிரிவு 7, உட்பிரிவு 653 என்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மட்டுமே ஒருவர் அமைச்சர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவார். அது மட்டுமின்றி ஒரு அமைச்சரை நியமிப்பது அல்லது நீக்குவது முதலமைச்சரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் ஆளுநரின் இத்தகைய பரிந்துரை சட்டவிரோதமானது என்று, தான் ஆளுநருக்குக் கடிதம் மூலம் இதைத் தெரிவித்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி பதவி குறித்து பறந்த ஆளுநரின் அடுத்தடுத்த கடிதம்:இந்தச் சூழ்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், 29.6.2023 அன்று இரவு 7:45 மணியளவில் ஆளுநர் ஒரு கடிதத்தை தனக்கு அனுப்பியதாகவும், அதில் இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164- ஆவது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சர் வி. செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், ஆளுநரின் அந்தக் கடிதத்துக்குப் பதில் அளிப்பது தொடர்பாக தான் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அன்றிரவு 11:45 மணிக்கு, 29.6.2023 தேதியிட்ட ஆளுநரின் "நிறுத்திவைக்கும்" மற்றொரு கடிதம் ஆளுநரிடமிருந்து தனக்குக் கிடைத்தாகவும், அந்த இரண்டாவது கடிதத்தில், இந்தியத் தலைமை வழக்கறிஞரின் கருத்தைப் பெறுமாறு உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக ஆளுநர் தெரிவித்ததாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் வெளிபாட்டை முன்னிறுத்திய முதலமைச்சர்:இப்பிரச்சினை தொடர்பாக நாடு முழுவதும் பரவலாக விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அனைத்து முன்னணி நாளிதழ்களும் தங்கள் தலையங்கங்களில் ஆளுநர் ஆர்.என். ரவியின் முறையற்ற செயல்பாட்டைக் கண்டித்துக் கடுமையாக விமர்சித்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், ஆளுநர் ஆர்.என். ரவி, தனது இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஆளுநர் பதவியை சிறுமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையை நிரப்பும் உரிமை முதலமைச்சருக்கே உண்டு:ஆளுநரின் 29-6-2023 தேதியிட்ட இந்த இரண்டு கடிதங்களுக்கும், தான் 30.6.2023 அன்று அனுப்பிய கடிதத்தில், சட்டப்பிரிவு 164(1)இன் கீழ், முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் அமைச்சர்களை நியமிப்பார் மற்றும் நீக்குகிறார் என்றும், அந்த வகையில் அமைச்சரவையில் யார் இடம்பெற வேண்டும் அல்லது யார் இடம்பெறக் கூடாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்பதையும் மீண்டும் தான் வலியுறுத்தியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, 29-6-2023 தேதியிட்ட ஆளுநரின் கடிதங்கள், அரசியலமைப்பிற்கு முரணானவை, செல்லாதவை மற்றும் சட்டத்திற்கு புறம்பானவை என்பதால் தான் அவற்றைப் புறக்கணித்தாக குடியரசு தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது விரும்பத்தக்கதல்ல' - குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்!