சென்னை: புதிய பங்கு வெளியீடு (IPO) மூலமாக எல்ஐசியின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஐந்து கோடி முதலீட்டில் உருவான எல்ஐசி நிறுவனமானது, தற்போது ரூ. 38 லட்சம் கோடி சொத்துக்களையும், ரூ. 34 கோடி ஆயுள் காப்பீடு நிதியையும் வைத்துள்ளது.
இந்தியாவின் தேவை எல்ஐசி
மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளையும் தனியாருக்கு கொடுக்கப் போவதாக அரசு அறிவித்திருந்த நிலையில், எல்ஐசி பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவுக்கு எல்ஐசி ஊழியர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், எல்ஐசி பங்குகளை தனியாருக்கு கொடுக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 13) தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்ஐசி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது.
யார் நலனுக்கானது இது?
அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று.
ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி, தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக்கூடாது. முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப்பெற்று எல்ஐசி நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.