சென்னை:தீவுத் திடலில் நேற்று (செப் 10) நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ, “வாழ்வாதார நம்பிக்கை” மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய ஸ்டாலின், “வாழ்வாதார நம்பிக்கை மாநாடு என்று இந்த மாநாட்டுக்கு பெயர் சூட்டியிருக்கிறீர்கள். நான் குறிப்பிட்ட அனைத்துமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையானவையே என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் உளமாற நம்புகிறேன்.
இந்த மாநாட்டுக்கு வரும்போதே, உங்களது கோரிக்கையை சிலவற்றை நிறைவேற்றும் கோப்புக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். 15 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. 10 ஆண்டுகள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவோம். அதில் எந்தவித சந்தேகம் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.
முதலாவதாக, அனைத்து வகையான, தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும், 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. அடுத்ததாக, பல்லாண்டுகளாக பணிமாறுதலின்றி இருக்கக்கூடிய பணியாளர்களுக்கு அவர்தம் விருப்பத்திற்கேற்ப, இணைய வழியில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த பள்ளிக்கல்வித்துறையின் நிர்வாகக் கட்டமைப்பு, மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாணை எண். 101 வாயிலாக 18 மே 2018 அன்று மாற்றியமைக்கப்பட்டது. ஆசிரியர்கள், சங்கங்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் இந்நிர்வாக முறை அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த மறு சீரமைப்பில் இருந்த பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இதனைக் களைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அரசாணை எண்.151 வாயிலாக உரிய உத்தரவுகள், 9-9-2022 அன்று நான் பிறப்பித்திருக்கிறேன்.
இதன் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், தொடக்கக் கல்விக்கென மாவட்ட அளவிலான அலுவலர் பணியிடம் புதிதாகக் கிடைக்கப் பெறுவதுடன், தனியார் பள்ளிகளை நிருவகிக்க தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகளின் நீண்டநாள் கோரிக்கையான, ஆங்கிலோ-இந்தியப் பள்ளிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தோடு முடிந்துவிடப் போவது இல்லை. வருங்காலங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வரும். அரசின் நிதிநிலை சீராகச் சீராக மக்கள் நலனுக்கான அறிவிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கும். மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்து என்பது மிகப்பெரிய நலத்திட்டம். கோடிக்கணக்கான மகளிர் இதன் மூலம் பயனடைகிறார்கள். இருந்தாலும் இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1520 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. பள்ளிப் பிள்ளைகளுக்கான சத்துணவுத் திட்டத்துக்கு ரூ.1949 கோடி ஆண்டுக்கு செலவாகிறது.
இந்நிலையில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும், வருகிற அண்ணா பிறந்த நாள் 15-ஆம் தேதியில் இருந்து நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பவுனுக்கு குறைவான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக பல லட்சம் மக்கள் பயனடைகிறார்கள் என்று இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அரசின் வருவாய் சுருங்கிவிடவும் செய்கிறது.