சென்னை: காவல்துறை அலுவலர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (மார்ச்.10) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரை, "காவல்துறை அமைச்சரவையில் எனது கட்டுப்பாட்டில் இருக்கின்ற துறை, இது, ‘சமூக வலைதள யுகம், இந்தச் சமூக வலைதளத்தில்- எல்லோருடைய கைகளிலும் செல்போன் வந்துவிட்டது.
காவல்துறையின் பெரிய கவலையாகவும் பணியாகவும் இருக்கப்போவது சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பது. அதன் மேல் உடனடி நடவடிக்கை எடுப்பதும்தான். இன்னும் சொல்லவேண்டுமென்றால் நாட்டில் ஏற்படுகிற சாதி, மத மோதல்களுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இடையூறு ஆகியவற்றுக்கும் தொடக்கப்புள்ளியாக இருப்பது இந்த சமூக வலைதளம்தான்.
இங்கு பல்வேறு தலைப்புகளில் பேசுபவர்கள் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளோடு ஆன்லைனில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தொடக்க உரையாற்றினார். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவையான இனங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நமது மாநிலம் ஒரு அமைதியான வாழ்வினை ஒவ்வொரு சராசரி குடும்பத்திற்கும், தொழில் நிறுவனத்திற்கும் மற்றும் பல்வேறு வணிக அமைப்புகளுக்கும், கல்வி அமைப்புகளுக்கும் வழங்கி, நாட்டிற்கே ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இதற்குக் காரணம், இங்கு நிலவும் அமைதியான சட்டம்-ஒழுங்கு நிலைமைதான்.
இதனை முன்வைத்துத்தான் மக்கள் ஒரு அரசினை, அங்கு நடக்கின்ற ஆட்சியினைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்கிறார்கள். இதர அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் உள்ள இந்தப் பெரிய வேறுபாட்டினை நீங்கள் உணர வேண்டும். இதனை எப்போதும் நெஞ்சில் நிறுத்தி நீங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக, ஓரிரு விஷயங்களை உங்களுக்கு இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.