சென்னை: கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 4ஆவது மாநாடு, 20 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர் பேசியிருப்பதாவது, “நோயால் உடலும் உள்ளமும் துவண்டு போகும் ஏழைகளுக்கு உரிய சிகிச்சை கொடுத்து, அவர்களைக் குணப்படுத்தி, அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைக்கும் மருத்துவர்களுக்கு, உயிர்களைக் காப்பாற்றுவது என்பது, தொழில் மட்டுமல்ல, சமுதாயத்திற்கு செய்கின்ற சேவை.
சமூகநீதி தான் சிகிச்சை:அப்படிப்பட்ட சமுதாயத்தில் சமத்துவம் நிலவ வேண்டும். சமத்துவம் இல்லை என்றால், அது ஆரோக்கியமான சமுதாயமாக இருக்க முடியாது. பிறப்பு மற்றும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளால் சமுதாயத்தின் சமத்துவம் சீர்குலைந்து நோய்வாய்ப்பட்டிருந்தால், அதற்குத் தேவையான சிகிச்சை சமூகநீதி தான். அம்பேத்கர் அந்தச் சமூக சிகிச்சையை, அரசியல் சட்டத்தின் மூலமாகக் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் அந்தச் சிகிச்சையை மேற்கொண்டவர்களில் மருத்துவர்களும் முக்கியமானவர்கள். முறையாக மருத்துவம் படித்து மக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த டாக்டர் நடேசனாரும், டாக்டர் டி.எம் நாயரும், பி.டி தியாகராயருடன் இணைந்து நீதிக்கட்சி என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உருவாக்கி, சமூகநீதி என்ற சிறப்பான சிகிச்சையை சமுதாயத்திற்குத் தந்தார்கள். அந்த சிகிச்சையைப் பனகல் அரசர் சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்.
இந்த சிகிச்சையை பெரியார் அறுவை சிகிச்சையாக மாற்றினார். புதிய ரத்த அணுக்களை உருவாக்குகின்ற வகையிலான சிகிச்சையை அண்ணா வகுத்தளித்தார். அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நோயற்ற நலமான சமூகத்தைப் படைத்தார். முன்னாள் பிரதமர் வி.பி சிங், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி என்ற சிகிச்சையை வழங்கினார்.
முன்னாள் பிரதமர் வி.பி சிங்கிற்கு சிலை: தன்னுடைய ஆட்சியே பறிபோனாலும் சமூகநீதிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக நின்ற அவரைப் போற்றுகிற வகையில் அவரின் உருவ சிலையை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டின் தலைநகரான இந்தச் சென்னையில் நாளை திறந்து வைக்கப் போகிறோம். இந்தப் பெருமையும் பெருமிதமும் இருக்கும் அதேசமயம், நமக்கு முன்பு இருக்கும் சவால்களையும் உணர்ந்துதான் இருக்கிறோம்.
மாணவர்களின் கனவுகளை பாழாக்குகிறது:மருத்துவத் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமூகநீதிக்கு எதிரான சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் எதிர்கொள்கிறோம். இந்தச் சவால்கள் அனைத்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக இருக்கும் மருத்துவக் கட்டமைப்புகளை சிதைப்பதோடு, மருத்துவம் படித்து, டாக்டர்களாகிச் சமுதாயத்திற்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்களின் உணர்வுகளையும், கனவுகளையும் பாழாக்குகிறது.
அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே பன்னோக்கு மருத்துவமனை:இந்திய மாநிலங்களில் மிகச்சிறப்பான மருத்துவக் கட்டமைப்பை கொண்டுள்ள மாநிலம், தமிழ்நாடு. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பன்னோக்கு மருத்துவமனைகள், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் தலைமை மருத்துவமனைகள், நகரங்கள் எல்லாவற்றிலும் அரசு பொது மருத்துவமனைகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்று அனைத்து மக்களுக்கும் உரிய நேரத்தில் உடனடி சிகிச்சை அளிப்பதற்கான கட்டமைப்புகளை, அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே கருணாநிதி உருவாக்கினார்.
அடுத்தடுத்து வந்த ஆட்சிகளிலும், உருவாக்கிய கட்டமைப்புகளைத் தவிர்க்க முடியாமல், வளர்த்தெடுத்தனர். இந்தியாவில் கிராமப்புற மக்களுக்கான மருத்துவமனைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் போதுமான அளவில் இல்லாத சூழலில், தமிழ்நாட்டின் திராவிட மாடல் - குக்கிராமம் வரை சிறப்பான பொது மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டிருப்பதை இந்தத் துறையின் வல்லுநர்கள் பலர் சுட்டிக் காட்டியிருப்பதோடு, தமிழ்நாட்டின் திராவிட மாடலை, மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
ஏழை எளிய மாணவர்களும் மருத்துவராக முடியும்:முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திமுக, உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று வாதாடிய போது, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்களும் ஆதரவாக நின்றீர்கள். அந்தச் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றோம். அதனால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் வாழுகிற இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மருத்துவப் படிப்பை உறுதி செய்தோம்.
பொது நுழைவுத்தேர்வு முறையை 2007 ஆம் ஆண்டு முழுமையாக ரத்து செய்து, அதற்கான சட்ட ஏற்பையும் குடியரசுத் தலைவர் மூலமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெற்றார். டாக்டர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான கமிட்டி மூலமாக, உரிய தரவுகளைச் சேகரித்து, கருணாநிதி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், கிராமப்புற, ஏழை எளிய, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளும் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவானது.