சென்னை: நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னும் ஆளுநரின் பரிசீலனையில் இருக்கும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவைத் தலைவர்கள் கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கல்வி வளர்ச்சிக்குத் தடை
இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், "ஏழை-எளிய, விளிம்புநிலை மக்கள் வாழும் நாட்டில், வறுமை சூழ்ந்த நாட்டில் சமத்துவமற்றத் தன்மை இருக்கும்பட்சத்தில் கல்வியை அனைவரும் அடைய வேண்டும் என்பது பெரிய சிரமமான காரியமாக உள்ளது. அதனால்தான் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது.
அந்த ரத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. ஏன் உச்ச நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றது. அப்படிப்பட்ட அந்தக் கல்வி உரிமையை இந்த நீட் தேர்வு பறிக்கிறது. தமிழ்நாடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் இந்த நீட் தேர்வை நாம் அனைவரும் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம்.
இது சமூக அநீதி அல்லவா?
12ஆம் வகுப்பில் கற்ற கல்வியைவிட மேலானதாக நீட் என்னும் இரண்டு மணிநேர தேர்வு இருப்பதை நாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், இது சமூக அநீதி அல்லவா? லட்சக்கணக்கில் பணம் செலுத்தி எத்தனை பேர் நீட் தேர்வுக்கான பயிற்சியைப் பெற முடியும். அதனால்தான் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதலாவதாகப் பிரதமரைச் சந்தித்து நீட் தேர்விற்குத் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தோம்.