சென்னை:சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 72 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராக வருகிறது. இந்நிலையில், திமுக சார்பாக அனைத்து தொகுதியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சியளிக்கும் கூட்டங்களும் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய நிலையில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாகவும், மாவட்டச் செயலாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி விடியல் பயணம் வரை மகளிருக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இத்திட்டங்கள் மகளிரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன. செல்லுமிடங்களில் எல்லாம் மகளிரின் உண்மையான அன்பைக் காண்கிறேன். இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.