சென்னை:இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (மே 3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தச் சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்குத்தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.
மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்
1. மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html
வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வங்கிக் கிளை : தலைமைச் செயலக கிளை,
சென்னை – 600 009
சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070
IFSC குறியீடு : IOBA0001172