சென்னை: வருகிற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 23ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது.
தற்போது இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 26 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இரண்டு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “இந்தியாவுடைய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுய ஆட்சி, ஏழைகளுக்கு வழங்கக்கூடிய நலன் இது எல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரம், அதிகார வர்க்கத்தில் சிக்கி இந்தியா சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
அதனால் மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜகவை அகற்ற வேண்டும் என்பதற்காக வருகிற நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து உள்ளனர். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் 15 எதிர்கட்சிகள் கலந்து கொண்டது. தற்போது பெங்களூருவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
தமிழ்நாட்டில் எப்படி கூட்டணி அமைத்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறோமோ, அதேபோல் இந்தியாவில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறோம். அகில இந்திய அளவில் பெரிய கூட்டணியாக மாநில வாரியாக சேர்க்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.