டெல்லி:டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலய திறப்பு விழா நாளை (ஏப்ரல் 2) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக நான்கு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 30ஆம் தேதி டெல்லி சென்றார். இந்நிலையில் நேற்று (மார்ச் 31) பிரதமர் மோடியைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், மோடியிடம் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். மேலும், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டிற்கான நெடுஞ்சாலைத்துறைத் திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை விவரங்களை அளித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் .1) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டப் பலர் உடன் இருந்தனர். அப்போது, தமிழ்நாட்டின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை:அதில், 14ஆவது நிதிக்குழு உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பரிந்துரைத்த அடிப்படை மானியம் மற்றும் செயல்பாட்டிற்கான எஞ்சிய மானியத்தினை விடுவிக்கக் கோருதல் 2015-2020 காலகட்டத்திற்கு, 14ஆவது நிதிக்குழு, தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை.
நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதைப்போன்று 14ஆவது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழ்நாட்டுக்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது.
மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது: அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17ஆம் ஆண்டுக்கான செயல்பட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்படவில்லை.