தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழக மீனவர்களை படகுடன் விடுவிக்க கடிதம் - முதலமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம்!

பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Stalin urges Tamil Nadu fishermen to be released with a boat!
தமிழக மீனவர்களை படகுடன் விடுவிக்க வலியுறுத்தும் மு க ஸ்டாலின்

By

Published : Jul 25, 2023, 3:30 PM IST

சென்னை:இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களை விடுவித்திடவும், அவர்களது படகினைத் திரும்ப ஒப்படைக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் நேற்று (ஜூலை 24) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 25) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சூழ்நிலையில், நீண்டகாலமாக நிலவிவரும் இப்பிரச்னையைத் தீர்க்க தூதரக அளவிலான முயற்சிகளை முடுக்கிவிடுமாறு தான் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இருப்பினும் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையுடனும், ஏமாற்ற உணர்வுடனும் இந்தக் கடிதத்தை எழுதுவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மீண்டும் உயர்ந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?

இந்தியாவிற்கு, இலங்கை அதிபர் அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்னை குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விவாதிக்க வலியுறுத்தி இருந்ததாகவும், மீனவர் பிரச்னையில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும், இந்திய மற்றும் இலங்கை மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மதிக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கும் இலங்கை அதிபருடனான சந்திப்பு வழிவகுக்கும் என தாம் நம்பியதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டு, கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களும், அவர்களது IND-TN11-MM-837, IND-TN11-MM-257 பதிவு எண்கள் கொண்ட 2 விசைப்படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதைத் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதால், அவர்கள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருவதாகவும், இந்தச் சம்பவங்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடுமையான சமூக-பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்றும் ஸ்டாலின் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கவும் கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர், பாக் வளைகுடா பகுதியில் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வு காண வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவும், இதுதொடர்பாக சாத்தியமான அனைத்து தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:வெளிநாட்டில் இருந்து வந்தால் தாலி அணிந்து வரக்கூடாதா..? மனமுடைந்து மலேசிய பெண் வெளியிட்ட வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details