சென்னை:இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், "வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்; பயிற்றிப் பல கல்வி தந்து, இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்" – என்று பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறு மகாகவியின் கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம், தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தொடங்கப்பட்ட நாள்முதல் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, நல்ல பயன் அளித்து வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டு மக்களிடையே மட்டுமின்றி, பிற மாநில மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காலை உணவுத் திட்டம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது.
இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்த நிலையில், இந்தத் திட்டத்தினை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு கேட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று ஆகஸ்ட் 22 கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து, அதற்கான அரசாணை கடந்த ஜூலை 27 அன்று வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, முதற்கட்டமாக 1,545 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1 இலட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தற்போது பயன் அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.