சென்னை:தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்டாலின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தவாறு, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு அறிவித்த நியாயமான மற்றும் ஆதார விலையைக் காட்டிலும் கூடுதலாக டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கி, 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் என்.ஜி.ஓ. காலனி, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் 1 கோடியே 35 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய உழவர் சந்தைகளை தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விவசாயிகளுக்கான ஓய்வு அறை, அலுவலகக் கட்டடம் மற்றும் உலர்களம் என மொத்தம் 15 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையில் சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: ஸ்மார்ட் கிளாஸ் முறை.. ஷார்ப்பான மாணவர்கள்!