சென்னை: சட்டப்பேரவையில் நேற்று (மே.9) தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சி தலைவரின் கேள்விகளுக்கு (இன்று - மே 10) பதிலுரையில் விரிவாக பதிலளிப்பதாகவும், மயிலாப்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். அதற்கு மட்டும் விரிவாக விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன் என்றார்.
சென்னை மயிலாப்பூரில் குடியிருந்த அமெரிக்காவிலிருந்து திரும்பிய தம்பதி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா காணாமல் போனது குறித்து சம்பவம் நடைபெற்ற அன்று மதியம் ஒரு மணி அளவில் புகார் பெறப்பட்டது. புகார் பெறப்பட்டு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் விரைவான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அதில் தொழில்நுட்ப உதவியோடு ஸ்ரீகாந்துக்கு சொந்தமான இன்னோவா காரோடு அவரது ஓட்டுநர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் பயணித்துக் கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக எந்தவித தாமதமின்றி ஆந்திரப்பிரதேச காவல் துறையோடு தொடர்புகொண்டு அவர்களின் ஒத்துழைப்போடு பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடியில் இன்னோவா கார் சென்றது கண்டறியப்பட்டது.