சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடானது. இதனை நேற்று (நவ.7) முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று (நவ.8) இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.
துறைமுகம், ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் உள்பட 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
துறைமுகத்தில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் முதலமைச்சர் பார்வையிட்டார். பின்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் ஸ்டாலின் ஆய்வு நிவாரண பொருட்கள்
இதனைத் தொடர்ந்து ராயபுரம் தொகுதியில், பாரத் திரையரங்கம், ரவுண்டானா அருகே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார். பின்னர் ஆர்.கே.நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஸ்டாலின் மேலும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட முல்லை நகர் மேம்பாலத்திற்கு சென்ற அவர், கால்வாயில் தண்ணீர் எவ்வளவு வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது, அடைப்புகளை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள நிவாரண மையத்திற்கு சென்று உணவு பொருட்களை வழங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: சாலையில் உள்ள பள்ளங்கள் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு