சென்னை:கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'விடுதலை போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியையும், வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (நவ.1) தொடங்கி வைத்தார்.
வ.உ.சி வாழ்க்கை வரலாறு அடங்கிய நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை மூன்று நாட்களுக்கு சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த வாகனத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
விடுதலை வீரர்களின் புகைப்படங்கள்
மேலும் விடுதலை போரில் தமிழகம் புகைப்பட கண்காட்சியில் 1751 ஆம் ஆண்டு முதல் 1947 வரை 250 ஆண்டுகள் இந்திய விடுதலைப் போரில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து நாளிதழ்களில் வெளிவந்த புகைப்படங்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, சுதந்திர போரின் போது எடுக்கப்பட்ட மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வேலு நாச்சியார்,வ.உ.சி, பாரதியார் உள்ளிட்டோர் புகைப்படங்கள் உள்ளன.