சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகிய ஏழு திருக்கோயில்களில் மருத்துவ மையங்களைக் காணொலிக் காட்சி வாயிலாக ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகைபுரியும் 10 திருக்கோயில்கள் தேர்வுசெய்யப்பட்டு அத்திருக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ஆம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகைபுரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர், மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருக்கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிடத் தகுதியான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு திருக்கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.