சென்னை:கோயம்பேட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் 2015ஆம் ஆண்டில் தொடங்கிய நிலையில், ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்து சாலைக்கான நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான நீதிமன்ற வழக்கு நிறைவடைய கால தாமதம் ஏற்பட்டது.
மேலும் 2020ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக இரவு பகலாக பாலத்தின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று, இன்று (நவ.01) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கோயம்பேடு மேம்பாலம் திறக்கப்பட்டது. 93.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோயம்பேடு மேம்பாலம் திறப்பு கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்துக்கு சற்று முன்பாக காளியம்மன் கோயில் தெருவில் தொடங்கும் இந்தப் பாலம், தேமுதிக அலுவலகம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீண்டு செல்கிறது.
இந்நிலையில், பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், பாலத்தின் மீது நடந்து சென்றும், காரில் பயணித்தும் அதன் தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
கோயம்பேடு மேம்பாலம் திறப்பு சரக்கு வாகன ஓட்டுநர்கள் இது குறித்து கூறுகையில், வடபழனி நிறுத்தத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை கடக்க அதிகபட்சம் 45 நிமிடங்கள் வரை ஆனதாகவும், தற்போது இந்தப் பாலத்தின் மூலம் ஐந்து நிமிடங்களில் கடந்து செல்ல முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில், 67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இதையும் படிங்க: 'கோயில் நகைகளை உருக்குவதற்கு அரசுக்கு உரிமை இல்லை' - கிருஷ்ணசாமி பேட்டி