சென்னை: தரமணி, டைடல் பூங்காவில் மேம்பட்ட உற்பத்திக்கான மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, சென்னை டைடல் பார்க்கில் ரூ. 212 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் ரூ.33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.
மேலும், திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ரூ.76.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM), தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் (Dassault Systems) உடன் இணைந்து, சென்னை டைடல் பூங்காவில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை (TANCAM) முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி (Hub and Spoke model) அடிப்படையில் இயங்கும் TANCAM, மாநிலமெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து, துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன் பயிற்சி, புதிய பொருட்கள் உருவாக்குதல் (Product Development), நவீன உத்திகள் ஆகியவை பெருக வழிவகுக்கும்.
மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களின் படிப்புக்கும், பணிக்கும் இடையூறு ஏதுமின்றி மெய்நிகர் சூழல் வழியாக வளர்ந்துவரும் மேம்பட்ட தொழில்நுட்பம் குறித்த பயிற்சிகளை அளிக்கும். சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் (SIPCOT Industrial Innovation Centres) ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களை (SIPCOT Industrial Innovation Centres) முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு மையமும் 23,500 சதுர அடி பரப்பளவில் சகப்பணியிடங்கள், சந்திப்பு மற்றும் கூட்ட அரங்குகள், உபகரணங்களுடன் கூடிய புத்தாக்க ஆய்வகங்கள், 545 இருக்கைகள் மற்றும் 228 பணி நிலையங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.