சென்னை:தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆற்றிய சேவையை பாராட்டி, 2022ஆம் ஆண்டிற்கான 'அவ்வையார் விருதை' கிரிஜா குமார்பாபுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்மணிகளை கௌரவிக்கும் வகையில் 'அவ்வையார் விருது' தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது மகளிர் அதிகாரம், மதநல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல், நிர்வாகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி, சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றியவர்களுக்கு அவர்களின் சேவையை பாராட்டி 8 கிராம் தங்கப்பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், சால்வை மற்றும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், 2022ஆம் ஆண்டிற்கான 'அவ்வையார் விருது' கிரிஜா குமார்பாபுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இந்திய குழந்தைகள் நலச்சங்கம், இளைஞர் நீதிக் குழுமம், பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுத்தல் குழு மற்றும் மருத்துவ நெறிமுறை ஆலோசனைக்குழு ஆகிய குழுக்களில் உறுப்பினராகப் பணியாற்றி செய்த சேவைகளுக்கும், யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ஆற்றிய பணிகளுக்கும், பயிற்சியாளராக பல சமூக பணியாளர்களை உருவாக்கியதற்கும் பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க: அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி - பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்