சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்பான விவாதத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஏப்ரல் 28) உரையாற்றினார்.
அப்போது, "கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறிப்பிட்டுச் சொல்லி, சில மாநிலங்கள் விலை குறைப்பதற்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று கருத்து சொன்னார். எரிபொருட்களின் மீது மாநில அரசுகள் வரி குறைக்காத காரணத்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்று கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு இதற்கு ஒரே வரியில் பதில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், அவர் இந்தக் கருத்தை எடுத்துச்சொல்லியிருக்கிறார். 2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெயின் விலை பெருமளவு சரிந்தபோது, அதற்கேற்றார்போல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், உபரி வருவாய் முழுவதையும் ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது.
வேடம் போடும் ஒன்றிய அரசு: பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய அரசு விதிக்கப்படக்கூடிய கலால் வரியானது, மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்கக்கூடியது என்ற காரணத்தால், அதனைக்குறைத்து மாநில அரசுகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும் வருவாயில் ஒன்றிய அரசு கை வைத்துள்ளது. சில மாநிலங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் வந்தபோது பாசாங்கு காட்டுவதுபோல தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரியைக்குறைத்து வேடம் போட்டது ஒன்றிய அரசு.
தேர்தல் முடிந்த பின்பு, அடுத்த வாரத்திலேயே வேகமாக முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியது ஒன்றிய அரசு. ஆனால், தமிழ்நாடு அரசு, திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு மக்கள் நலன் கருதி, நிதிநிலைமையையும் பொருட்படுத்தாமல், ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாகவே, பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தது.
இவையனைத்தும் தமிழ்நாடு மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் பெட்ரோல் விலையைக்குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டுவிடுகிறேன்" என்று முதலமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: 22ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 28) பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லை