சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு நேற்று (ஜூலை 8) கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களுக்கு எது நல்லது என்பதை முடிவு செய்ய ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை அவர் மறந்துவிட்டார். அவர் மக்களின் தலைவர் அல்ல; நியமனம் செய்யப்பட்ட ஒரு நிருவாகி. கடந்த ஜன 5ஆம் தேதியன்று நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும், பண்பாட்டையும், இலக்கியத்தையும், திராவிடக் கருத்தியலையும், அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன.
துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில், நாங்கள் திராவிடர்கள், எங்களுக்கும் இதற்கும் (பாரதம்) எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் நடந்து வருகிறது. அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை. மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிருவாக நோக்கங்களுக்காக உள்ளது, எனவே, நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது; கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
இங்கே தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான கதையாடல் உருவாக்கப்பட்டுள்ளது; நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழ்நாடு மட்டும், 'இல்லை, நாங்கள் உடன்படவில்லை' என்று சொல்லும். இது ஒரு பழக்கமாகிவிட்டது, கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன. இது உடைக்கப்பட வேண்டும், உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று, பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை.
திராவிட அரசியல் பிற்போக்குத்தனமானது என்று ஆர்.என்.ரவி கூறியிருப்பது அவதூறானது மட்டுமல்ல; அது அறியாமையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுமாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலான திராவிட அரசு மற்றும் அரசியலின் விளைவாகவே, இன்றைக்கு வளர்ச்சியில் இந்திய அளவில் முதல் 3 இடங்களில் தமிழ்நாடு உள்ளது. வளர்ச்சியும், சமூகநீதியும் கைகோர்த்துச் செல்லும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டின் சமூக முன்னேற்றக் குறியீட்டில், தேசிய சராசரியான 60.19-க்கு எதிராக, தமிழ்நாடு 63.33 புள்ளிகளைப் பெற்றுள்ளது. திராவிட அரசியல் பிற்போக்கானதா அல்லது முற்போக்கானதா என்பதை நடுநிலையாளர்களால் இந்தத் தரவுகளைக் கொண்டு கணிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், தொடர்ந்து திராவிட ஆட்சி நடப்பதால்தான் பொருளாதார வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது. அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரத்தில், தமிழ்நாடு 38ஆயிரத்து 837 தொழிற்சாலைகளுடன் முதலிடத்திலும், குஜராத் மாநிலம் 28ஆயிரத்து 479 தொழிற்சாலைகளுடன் 2ஆவது இடத்திலும் உள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில், 13ஆயிரத்து 641 ரூபாய் கோடியாக இருந்த மின்னணு ஏற்றுமதி, கடந்த 2 ஆண்டுகளில் 223 விழுக்காடு அளவிற்கு வளர்ச்சியைப் பதிவு செய்து, 2022-2023-ஆம் ஆண்டில் 44ஆயிரத்து 44 கோடி ரூபாயாக உயர்ந்து, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.