சென்னை:அதிகரித்துவரும் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள், திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்ட தூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.5.2023 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேலூர் பகுதியில் 41.8 டிகிரி சென்டிகிரேடும், கரூர்-பரமத்தி பகுதியில் 41.5 டிகிரி சென்டிகிரேடும் வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி கூடுதல் வெப்பம் நிலவக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள
மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அரசு தலைமைச் செயலாளர் தலைமையின் கீழ் பல்துறை ஆய்வுக் கூட்டம் 17 ந் தேதி நடத்தப்பட்டது.
வெப்பம் அதிகரிப்பால் பணி முடிக்க அறிவுரை:
திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய துறையின் அலுவலர்கள் செய்வதுடன், இப்பணியாளர்களுக்கு போதுமான குடிநீர், ஓ.ஆர்.எஸ். இருப்பு, நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.