சென்னை: இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிடுள்ள செய்திக் குறிப்பில், ”தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.
மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா ஊரும் எனது ஊர். எல்லா மக்களும் எனது உறவினர் என்று நினைத்து, அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்தால். இந்த வாழ்வு மிகவும் இனிமையானதாகத் திகழும் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள் தான் தமிழர் பண்பாட்டின் அடையாளமும், அடித்தளமும் ஆகும்.