சென்னை:2025ஆம் ஆண்டிற்குள் ’காசநோய் இல்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை அடைய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காசநோய் உள்ள இடங்களில் வசிப்பவர்களிடம் காசநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, முதல் கட்டமாக 14 நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டாம் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு தலா 46 லட்சம் ரூபாய் வீதம், 10 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் கூடிய 23 நடமாடும் வாகனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இவ்வாகனம் ஏழை, எளிய மக்களைத் தேடிச்சென்று காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்புப்பகுதிகள், முதியோர் இல்லங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காசநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில், காசநோய் கண்டறிவதற்குப் பயன்படுத்தப்படும்.
காசநோய் உள்ளவர்களைக் கண்டறிய, அவர்களுக்குச் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே போன்றவற்றை இலவசமாக மேற்கொண்டு காசநோய் உள்ளதா என்பது கண்டறியப்படும். காசநோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், மருந்துகள், 500 ரூபாய் உதவித்தொகை மற்றும் தொடர் கண்காணிப்பு சேவை வழங்கப்படுவதோடு, அங்குள்ள மக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின்வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டர் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு முறைகளைத்தெரிவிப்பதற்கு வண்ண தொலைக்காட்சி திரையும், முகாம்களின்போது மக்கள் வசதிக்காக நிழற்குடையும் இவ்வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் உள்ள இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் 5 லட்சம் நபர்களுக்கு காசநோய் கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.