சென்னை:அரசு முறை பயணமாக நான்கு நாள்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை திரும்பினார். அவரை அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், கே.என். நேரு, ரகுபதி, மதிவேந்தன், செந்தில் பாலாஜி, த.மோ. அன்பரசன், தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜீவால், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக துபாய், அபுதாபி போன்ற நாட்டிற்கு சென்று வந்துள்ளேன். எனது பயணம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. துபாய் எப்படி ஒரு பிரம்மாண்டமான நாடக உருவாகி இருக்கிறதோ அதேபோல் எனது பயணமும் மிக பிரம்மாண்டமான வகையில் அமைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். ஆறு மிக முக்கிய தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் போடப்பட்ட ஆறு முக்கிய நிறுவனங்கள் பெயர் பட்டியல்
- இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- ஜவுளிதுறை சார்ந்த ஒயிட் ஹவுஸ் (WHITE HOUSE) நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு ஒரு கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- மருத்துவத்துறை சார்ந்த AASTAR TM Health care நிறுவனத்தோடு 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு 3ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த 6 நிறுவனத்தோடு 6 ஆயிரத்து 100கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது..இந்த ஒப்பந்தம் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக போகிறது..எனவே இந்த பயணம் ஒரு வெற்றி பயணமாக அமைந்திருக்கிறது.