சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனியார் ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் வாயிலாக திமுக சார்ந்த எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு, தமிழகத்தில் பாஜக ஆட்சி, எதிர்கட்சிகளின் வியூகம் உள்ளிட்ட பலதரப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் மற்றும் பதிலளித்து பேசினார். அவைகள்,
1) மக்களவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது பேசிய பிரதமர் அவர்கள் எதிர்கட்சிகளின் கூட்டணியை சந்தர்ப்பவாத, அகங்காரக் கூட்டணி என்று விமர்சித்துள்ளார். நடப்பு கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் போதிய விவாதமின்றி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பிற பாஜக அமைச்சர்களும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியைப் பொறுப்பில்லாத கூட்டணி என விமர்சித்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எதிர்கட்சிகளால் கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களாக பாஜக அரசு மீதும், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அது எதற்குப் பதில் சொல்லவில்லை பிரதமர். மாறாக, தேர்தல் மேடைகளில் பேசுவதைப் போல காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசிக் கொண்டு இருந்தார்.
2014 தேர்தலுக்கு முன்னதாக அவர் காங்கிரஸ் கட்சி மீது என்ன குற்றச்சாட்டு வைத்தாரோ, அதே குற்றச்சாட்டை 9 ஆண்டுகளுக்குப் பிறகும் வைத்துக் கொண்டு இருந்தார். பாஜக அமைச்சர்கள் சிலரே கொட்டாவி விட்ட காட்சிகளை நேரலையில் பார்க்க முடிந்தது.
பிரதமர் உரையை யாராவது எடுத்து முழுமையாகப் படித்தால், இது காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து 'எதிர்கட்சித் தலைவர்' மோடி பேசுவதைப் போல இருக்கும். பாஜக ஆட்சியை ஒரு வாக்கில் கவிழ்த்த கட்சி அதிமுக. அந்தக் கட்சிக்கு எதிராகத் தான் 2009, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்கு கேட்டார் மோடி. இப்போது அதிமுகவை அருகில் வைத்திருப்பதை விட சந்தர்ப்பவாதம் இருக்க முடியுமா?
2) ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசுகையில், 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜெயலலிதா அவர்களின் சேலை இழுக்கப்பட்டதாகக் கூறி, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாகத் தி.மு.க.வை நேரடியாகத் தாக்கிப் பேசியிருக்கிறார். உங்களது பதில் என்ன?
நிர்மலா சீதாராமன் ஏதாவது வாட்ஸ் அப் வரலாற்றைப் படித்து விட்டுப் பேசுவார். ஜெயலலிதாவுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அது அவராக நடத்திக் கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும் அறிவார்கள்.
இப்படி சட்டமன்றத்தில் செய்ய வேண்டும் என்று முன்னதாகவே தனது போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார் என்றும், அப்போது நான் உடனிருந்தேன் என்றும் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு அவர்கள் (இப்போதைய திருச்சி காங்கிரஸ் எம்.பி) சட்டமன்றத்திலேயே பேசி அதுவும் அவைக் குறிப்பில் உள்ளது. எனவே தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வைப் பொய்யாகத் திரித்து நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பேசியது வருந்தத்தக்கது, அவையைத் தவறாக வழிநடத்துவது.
3) தமிழ்நாடு ஆளுநருக்கும் உங்களுக்குமான மோதல் அவர் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிக் கடிதம் எழுதியதில் தீவிரமடைந்தது. அவரைத் திரும்பப் பெற வைக்க நீங்கள் குடியரசுத் தலைவருக்கே கடிதம் எழுதினீர்கள். சட்ட ஆலோசனை பெற வேண்டி, தனது கடிதத்தை அவர் நிறுத்தி வைத்துள்ளார் என்றபோதிலும், தமிழ்நாடு அரசாங்கத்தில் அவர் எத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்?
மோடி, குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, 'குஜராத் ஆளுநர் மாளிகை என்பது காங்கிரஸ் கட்சி அலுவலகம்' என்று குற்றம் சாட்டினார். இன்றைய ஆளுநர் மாளிகைகள், பாஜக அலுவலகங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன.
'எனக்கு அதிகாரம் இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிகாரத்தை மீறிச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். 'எனக்கு வேலையே இல்லை' என்று சொல்லிக் கொள்ளும் ஆளுநர் ரவி, வேண்டாத வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கிறார்.
4) செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியின்போது ஊழல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டீர்கள். அது ஏன்? தற்போது உச்சநீதிமன்றமே அவரைக் கைது செய்ததிலும், அமலாக்கத்துறை விசாரிப்பதிலும் தவறில்லை என்று கூறியுள்ளது. பிறகு ஏன் அமைச்சராகத் தொடர அனுமதிக்கிறீர்கள்?
பாஜக தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்க இது போன்ற விசாரணை அமைப்புகளை வைத்துள்ளது. இது பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு அல்ல. இதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து உதாரணங்களைச் சொல்ல முடியும். பாஜகவின் அரசியல் எதிரிகளின் வீடுகளுக்குள் மட்டுமே இந்த அமைப்புகள் போகும்.
அப்படி விசாரிக்கப்பட்ட நபர்கள், பாஜகவில் ஐக்கியம் ஆனால், அவர்கள் புனிதமாகி விடுவார்கள். வழக்குகளில் இருந்து தப்பிக்கலாம். இத்தகைய வாஷிங் மிஷினாகத்தான் இவை இருக்கின்றன. எனவேதான் இவர்களது கைதுகளைக் 'குற்ற விசாரணைகள்' என நாங்கள் பார்க்கவில்லை. 'அரசியல் விசாரணைகள்' ஆகத் தான் பார்க்கிறேன். அரசியல் வழக்கில் கைதானவர்களுக்கு தரப்படும் சலுகையே செந்தில்பாலாஜிக்கும் தரப்பட்டுள்ளது.
5) கூட்டாட்சி வடிவத்தையும், கூட்டுறவுக் கூட்டாட்சியியலையும் ஒன்றிய அரசு சிதைக்கிறது என சி.பி.ஐ., அமலாக்கத்துறை நடவடிக்கைகளை வைத்து நீங்கள் கூறுவது ஏன்? எதிர்க்கட்சிகளின் கூட்டணி இதைத் தடுத்து நிறுத்துமா? எதிர்க்கட்சிகள் எல்லாம் இணையும்போது எவை முக்கியமானவையாகக் கருதப்படும்?
பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகள் ஒரே அணியாக ஆகிவிடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அனைவரும் பிரிந்து நின்றால்தான் பாஜகவுக்கு லாபம். எனவேதான் அனைவரையும் ஒன்று சேர்க்காமல் இருக்கவே இது போன்ற (சி.பி.ஐ, அமலாக்கத்துறை) ரெய்டுகள் செய்யப்படுகின்றன. அச்சுறுத்துவது, பயமுறுத்துவதுதான் இந்த ரெய்டுகளின் நோக்கமாகும்.
6) நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க முன்னிறுத்தியது கடந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களுடைய பிரதமர் முகம் யார் எனக் கூறித் தேர்தலை எதிர்கொள்ளுமா?