சென்னை:முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஜூன் 18ஆம் தேதி லேசான காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் கலந்துகொள்ள இருந்த இரண்டு அரசு நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது.
மருத்துவர்கள் அறிவுரையின்படி, முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வில் இருந்துவந்தார். முன்னதாக, 'இரண்டொரு நாட்களில் மீண்டும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் அரசு மற்றும் கட்சிப் பணிகளை வழக்கம் போலத் தொடர்ந்திட ஆயத்தமாக இருக்கிறேன். ஓய்வில்லை நமக்கு. முதலிடமே இலக்கு' என கடிதம் வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று (ஜூன்.23) காலை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் அவரது, பேத்தி டாக்டர் அ.தீப்தி - மு.விஷ்வக்சேனா ஆகியோரது திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்ல திருமண விழா அதனைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விட்டது காய்ச்சல்.. மீண்டும் உற்சாகத்துடன் அரசு பணியை கவனிக்க தொடங்கிய ஸ்டாலின் இதில், தென்மேற்குப் பருவமழை பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்வது, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை விரைவுபடுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதையும் படிங்க: என் மீதான அன்புதான் அந்த பதற்றத்திற்கான காரணம் என்பதை அறிவேன் - தொண்டர்களிடம் கடிதம் வாயிலாக உருகிய ஸ்டாலின்!