சென்னைபல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம். எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி" என்று பாடினார் மகாகவி பாரதியார்.
அதற்கு எடுத்துக்காக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர்ந்து கோலோச்சி வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு எனது வணக்கங்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். பல்கலைக்கழக மானியக் குழுவானது (UGC) சிறந்து விளங்கும் திறன்கொண்ட பல்கலைக்கழகம் என்ற சிறப்பு அடைமொழியினை சென்னைப் பல்கலைக்கழகத்துக்குத் தந்துள்ளது.
அத்தகைய சிறந்து விளங்கும் திறன் கொண்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வருகை தந்தது இந்தப் பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாளாக இதனை மாற்றி அமைத்துள்ளது.இந்தியக் குடியரசுத் தலைவர்களாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி கிரி, நீலம் சஞ்சீவி ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், ஏ.பி.ஜே அப்துல் கலாம் என ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம்.
நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமன் படித்த பல்கலைக்கழகம் இது. நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி உட்பட பல தலைசிறந்த பெண் ஆளுமைகளை வழங்கிய பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. தமிழ்நாட்டின் அண்ணா இந்த பல்கலைக்கழகத்தில் தான் படித்தார். இன்று முதலமைச்சராக உங்கள் முன் உரையாற்றும் நானும் இதே பல்கலைக்கழகத்தை சார்ந்தவன் தான்.
அந்த வகையில் உங்கள் சீனியராகவும் நான் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டுள்ளேன். கடந்த 165 ஆண்டுகளாகத் தென்னிந்தியாவில் மட்டுமில்லாமல், நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அந்தக் காலத்தில் இருந்தது சென்னைப் பல்கலைக்கழகம் மட்டும்தான். நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் தான் சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
இன்றைய தினம் தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன. தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில்தான் உள்ளன.
தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளன. 100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. 40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன.
30 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளன. 30 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளன. இப்படி நான் அடுக்கிக் கொண்டே போக முடியும். கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காக போட்ட விதைதான் இதற்குக் காரணம். பள்ளிக் கல்வியை வளர்த்தார் காமராசர் . கல்லூரிக் கல்வியை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி விரிவு செய்தார்.
இன்று திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஆராய்ச்சிக் கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம். அனைத்து மாணவர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கி தனி திறமையானவர்களாக வளர்த்தெடுத்து வருகிறோம். தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள்களைப் படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் எனது கனவு திட்டமான நான் முதல்வன் திட்டம் சிறந்து விளங்கி வருகிறது.
ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறனில் மேம்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு. மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களுக்கும் அவர்களது துறைசார்ந்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் இந்தத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக வழங்கப்படுகிறது.