சென்னை:ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ள நிலையில் இதற்காக உழைத்த குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக முதலமைச்சர் தன் X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று (ஜன.16) ஸ்டார்ட் அப் விருதுகள் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான மாநில தரவரிசை விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த செயல்திறன் எனும் பிரிவில் வழங்கப்பட்ட விருதுகளில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது என தன் X தள பதிவில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 400 நாட்களை தாண்டிய கரும்பு விவசாயிகள் போராட்டம்! இடுகாட்டில் கருப்பு கொடி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டம்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் கூறியிருப்பதாவது, "ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது.
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும் அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "ராமர் மயமாகி வரும் இந்தியா" - ஆளுநர் ஆர்.என்.ரவி!