தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாரதியார் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்' - முதலமைச்சர் அறிவிப்பு - mahakavi day

பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் அறிவிப்பு
முதலமைச்சர் அறிவிப்பு

By

Published : Sep 10, 2021, 4:28 PM IST

சென்னை:பெரும்புலவன் பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளைப் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு:

1. மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக' கடைபிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ' பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் வழங்கி தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்‌.

2. பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

முதலமைச்சர் அறிவிப்பு

3. மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்துள்ளனர். அவர்களில் முக்கியப் பங்காற்றிய பாரதி ஆய்வாளர்களான, மறைந்த பெ. தூரன், பத்மநாபன், ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்கள் குடும்பத்தாருக்கு மற்றும் மூத்த ஆய்வாளர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் ய. மணிகண்டன் ஆகியோருக்கும் தலா மூன்று லட்சம் ரூபாய், விருது, பாராட்டுச் சான்றிதழ் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்.

முதலமைச்சர் அறிவிப்பு

4. பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப்பொருட்களைப் பூம்புகார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

5. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் தேடித் தொகுக்கப்பட்டு, அவை வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும். பாரதியின் வாழ்வை சிறுவர்கள் அறியும் வண்ணம் சித்திரக்கதை நூலாகவும், பாரதியாரின் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்து தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்களின் வண்ண ஓவியங்களுடன் நூல் ஒன்றாகவும் வெளியிடப்படும். மேலும் பாரதியாரின் படைப்புகள் மற்றும் பாரதியார் குறித்த முக்கிய ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

முதலமைச்சர் அறிவிப்பு

6. பாரதியாரின் நூல்கள், அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம், திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

7. உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்தப்படும்.

8. திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியாரின் பாடல்கள் மட்டுமே இடம்பெறும் இசைக்கச்சேரிகள் 'திரையில் பாரதி' என்ற நிகழ்வாக நேரு உள் விளையாட்டு அரங்கில் கரோனா தொற்றுப் பரவல் முழுமையாக ஓய்ந்த பிறகு நடத்தப்படும்.

9. பாரதியாரின் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஓராண்டிற்கு, சென்னை பாரதியார் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சியொன்று செய்தித்துறையின் சார்பில் நடத்தப்படும்.

10. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.

11. உத்தரப்பிரதேச மாநிலம் ‌காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.

12. பாரதியார் படைப்புகளைக் குறும்படம்‌, நாடக வடிவில் தயாரிக்க நிதியுதவி வழங்கி அவற்றை நவீன ஊடகங்களின் வழியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

13. பாரதியாரின் உணர்வுமிக்க பாடல் வரிகளைப் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் எழுதியும் வரைந்தும் பரப்பப்படும்.

14. பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.

எழுத்தும் தெய்வம் - எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர்... சும்மா இருக்க மாட்டோம் - பொங்கும் அழகிரி

ABOUT THE AUTHOR

...view details